நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் திரு நரேந்திர  மோதி அறிவித்தார் – மத்திய நிதியமைச்சர் திரு அருண்  ஜேட்லி.

நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் திரு நரேந்திர  மோதி அறிவித்ததாக மத்திய நிதியமைச்சர் திரு அருண்  ஜேட்லி தெரிவித்துள்ளார். முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் நாட்டின் நலிவடைந்த மக்களைக் கொண்டு  வருவதற்கு அரசு எடுத்தது மற்றொரு முக்கியமான நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பணம் வைத்திருந்தவர்கள் தங்களது பணத்தை வங்கிக் கணக்கில் கொண்டு  வருவதற்கு வலியுறுத்தும் நடவடிக்கையாக பணம் மதிப்பிழப்பு அறிவிப்பு இருந்தது என்றும் திரு ஜேட்லி கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்ட கறுப்புப் பணத்தை முதல் இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட்டதாகவும், தகுந்த தண்டனை வரி செலுத்தி அப்பணத்தை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவர, வெளிநாட்டு கறுப்புப் பண முதலீட்டாளர்கள் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம், சுமார் 17 லட்சத்து 42 ஆயிரம் போலி வங்கிக் கணக்குகள் கண்டறிப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கணக்கில் வராத பணம் அதிக அளவில் பரஸ்பர நிதி உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டதாகவும், அதன்மூலம், அப்பணம் முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் வரவழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மட்டுமின்றி, சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வரப்பட்டதால் வரிவருவாய் இருமடங்காக அதிகரித்துள்ளது என்று திரு அருண்  ஜேட்லி கூறினார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தனி நபர் வரி வருவாய் 20 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் அவர் கூறினார். நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி  வருவாயும் இந்த காலகட்டத்தில் 19 சதவீதம் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட அனைத்து ரொக்கமும் வங்கிகளில் செலுத்தப்பட்டதால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயனற்றதாகக் கூறப்படுவது தவறான புரிதலுடன் கூடிய விமரிசனம் என்று கூறிய நிதியமைச்சர், பணத்தைப் பறிமுதல் செய்வது இந்நடவடிக்கையின் நோக்கமல்ல என்றும், அதனை முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்துக்குள் வரவழைத்து, வரி செலுத்த வைப்பதே பரந்த நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும், 6 கோடியே 86 லட்சம் பேர் தங்களது வருமான வரிக்கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், கிராமப்புற இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதற்கும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும் அரசுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கும் பணம் மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் உதவியதாகவும் திரு அருண்  ஜேட்லி கூறியுள்ளார்.

 

Pin It