நான்காவது ராய்சினா பேச்சுவார்த்தைகள்.

(நவோதயா டைம்ஸ் பத்திரிக்கையின் ராஜீய விவகாரங்கள் ஆசிரியர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்).

நான்காவது ராய்சினா பேச்சுவார்த்தைகள் புது தில்லியில் நடந்து முடிந்தன. முன்னணி சர்வதேச கொள்கை அமைப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் செயலுத்தி நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் துவக்க நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோதி அவர்களும் நார்வே பிரதமர் திருமதி எர்னா சோல்பர்க் அவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டது, அடுத்த இரண்டு நாட்களுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்தது. ராய்சினா பேச்சுவார்த்தைகள் இந்தியாவின் முதன்மை வருடாந்திர நிகழ்வாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் முன்னணி சிந்தனை நிறுவனமான அப்சர்வர் ரிசர்ச் ஃபௌண்டேஷனும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகின்றன.

நார்வே பிரதமர், அவரது உரையில், நமது கடல்களின் கட்டுப்பாட்டிலோ அல்லது எந்த ஒரு விஷயத்திலோ பலசாலி சொல்படிதான் கேட்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பயன்படுத்த முடியாது என்பதை வலியுறுத்தினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தனது உரையில், அனைத்து நாடுகளும் சமமான நிலையில் செழிக்கக்கூடிய, ஜனநாயக மதிப்புகள் மற்றும் சட்டம் சார்ந்த ஒரு சர்வதேச ஒழுங்கு முறைக்கே இந்தியாவின் ஆதரவு இருக்கும் எனத் தெரிவித்தார். இவரது இந்தக் கருத்து, தென் சீனக் கடலில் நடக்கும் சீனாவின் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை மறைமுகமாக குறிப்பதாகத் தெரிகிறது. பல்வேறு  குழு விவாதங்களின் போதும் இந்த விஷயம் கவனமாகக் கையாளப்பட்டது.

ராய்சினா பேச்சுவார்த்தைகள், உலக சமூகத்தை எதிர்நோக்கியிருக்கும் மிக முக்கியப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் காண்பதில் உறுதிப்பாட்டுடன் செயல்படும் ஒரு பலதரப்பு மாநாடாகும். இந்தப் பேச்சுவார்த்தைகள், பல நாடுகளைக் கொண்ட, பல துறைகளுக்கு இடையிலான ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், நாட்டுத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் முக்கிய தனியார் துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். தற்போது புது தில்லியில் நடந்த கூட்டம், மலேசியத் தலைவர் அன்வர் இப்ரஹிம் அவர்கள் அளித்த முடிவுரையுடன் நிறைவு பெற்றது. மலேசியாவில் தற்போதுள்ள பிரதமர் மஹதிர் மொஹம்மத்திற்குப் பிறகு, அன்வர் இப்ராஹிம் அவர்கள் பிரதமராகப் பொறுப்பேற்பார் எனப் பரவலாகக் கூறப்பட்டு வருகிறது. அப்சர்வர் ரிசர்ச் ஃபௌண்டேஷனின் தலைவர் திரு. சஞ்சய் ஜோஷி, பழைய ஏற்பாடுகளை சீரமைக்கவும், இந்த நூற்றாண்டிற்கான மனித முயற்சிகளை வடிவமைக்க, விதிகளை மாற்றி அமைக்கவும் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன எனக் கூறினார். இந்நிறுவனத்தின் அதிபர் டாக்டர் சமீர் சரன், இந்த ஆண்டின் ராய்சினா பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சம் ஐரோப்பா, அல்லது மொத்த யூரேஷியா பற்றியதாக இருந்தது எனத் தெரிவித்தார்.

ராய்சினா பேச்சுவார்த்தைகளின்போது அதிகமாக விவாதிக்கப்பட்ட மற்றொரு விஷயம், இந்தோ-பசிஃபிக் பகுதி சார்ந்த்தாகும். இந்த விவாதங்களின் போது, இந்தியக் கடற்படைத் தலைவர் அட்மிரல் சுனில் லான்பா மற்றும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முக்கிய ஆயுதப்படைத் தளபதிகள் கலந்து கொண்டனர். இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோக்லே அவர்களும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உரையாற்றினார். அண்டை நாடுகளிடையிலும், அதைத் தாண்டி மற்ற பகுதிகளிலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சந்திக்கும் சவால்களைப் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

இவ்வாண்டின் ராய்சினா பேச்சுவார்த்தைகளில் 600 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் 92 நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ‘உலகளாவிய மறு-ஒழுங்கு- புதிய புவி வடிவியல், திடமற்ற கூட்டணிகள்: நிச்சயமற்ற விளைவுகள்’ என்பது இவ்வாண்டின் முக்கியக் கருவாக இருந்தது. ஓ.ஆர்.எஃப் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ஜோஷி அவர்கள், மூன்று நாட்கள் நடந்த கருத்தாழம் மிக்க பேச்சுவார்த்தைகளின் மூலம், அமைதியான முறையில் அனைவரையும் உள்ளடக்கிச் செல்லக்கூடிய ஒரு உலகிற்கான பங்களிப்பில் புதிய பாதை கிடைத்துள்ளது எனக் கூறினார்.

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளைர், இத்தாலியின் முன்னாள் தலைவர் பௌலோ ஜென்டிலோனி, கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்பர், ஸ்வீடன் நாட்டின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட், ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்ஸாய் ஆகிய உலகத் தலைவர்களும், ஈரான், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், மங்கோலியா. நேபாளம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமச்சர்களும் இந்த மூன்று நாள் மாநாட்டில்  கலந்து கொண்டு உரையாற்றினர்.

ராய்சினா பேச்சுவார்த்தைகளில், பல நாடுகளில் முக்கியப் பதவிகளில் இருக்கும், இருந்த பிரமுகர்கள் கலந்து கொண்டதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் நடக்கும் ஷாங்க்ரிலா பேச்சுவார்த்தைகளுக்கு அடுத்தபடியாக, ஆசியாவின் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டமாக இது உருவெடுத்துள்ளது. ஷாங்க்ரிலா பேச்சுவார்த்தைகளில், முக்கியக் கொள்கை அமைப்பாளர்கள் கலந்துகொண்டு தங்கள் அரசாங்கங்களின் தேசியக் கொள்கைகளைப் பற்றித் தெளிவாக விளக்குவது வழக்கம். கடந்த ஆண்டு நடந்த ஷாங்க்ரிலா பேச்சுவார்த்தைகளில், இந்தியப் பிரதமர் அவர்கள் முக்கிய விருந்தாளியாகக் கலந்து கொண்டார். அதில், அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிஃபிக் பற்றிய புகழ்பெற்ற உரையை அவர் ஆற்றினார். இந்தக் கருத்து பற்றிய ஆலோசனைகள் ராய்சினா பேச்சுவார்த்தைகளிலும் தொடர்ந்தன.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள், நரேந்திர மோதி அவர்களின் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை அமைப்புகளைப் பற்றியும், 2019 ஆம் ஆண்டிற்கான திசை பற்றியும் தெளிவாக விளக்கமளித்தார். இன்றைய நிலையில், உலக நாடுகள், அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா குழுவிற்கும் ரஷ்யா-சீனா குழுவிற்கும் இடையில் பிரிக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு குழுக்களுமே நாடும் நிலையில் இந்தியா உள்ளது. இதன் அடிப்படையில், இந்தியாவின் உலகளாவிய ஈடுபாடுகளை ஒரு விரிவான, துடிப்பான முறையில் புதுப்பிப்பது பற்றி திருமதி ஸ்வராஜ் பேசினார். இந்த புதுப்பித்தல், ‘சப்கா சாத் சப்கா விகாஸ்’, அதாவது ‘அனைவரும் ஒன்று சேர்வோம், அனைவரும் முன்னேறுவோம்’ என்ற இந்தியாவின் உள்நாட்டுக் குறிக்கோளை, அனைத்து நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்யும் அடிப்படையில் இருக்கும்.

 

Pin It