நாளேடுகள் நவில்வன

இன்றைய நாளேடுகளில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா இணைந்த நாற்கரம் குறித்தும் பிரிட்டனில் நிலவி வரும் குழப்பமான அரசியல் சூழல் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளன. தமிழ் நாளிதழ்களில், ஜி எஸ் டி வரிகள் குறைக்கப்பட்டது குறித்தும் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்குரிமை பெறும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர விழையும் மத்திய அரசின் நிலைப்பாட்டைப் பாராட்டியும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மனிலாவில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டிற்கிடையே இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இணைந்த நாற்கரம் என்ற அமைப்பு புத்துயிர் பெறுவது குறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு தலையங்கம் வெளியிட்டுள்ளது. அப்பிராந்தியத்தின் வர்த்தகம் மற்றும் கடல் போக்குவரத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது என்றும் இது இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கைக்கு வலு சேர்த்து இந்தியாவுக்கான வாய்ப்புக்களைப் பெருக்கும் என்றும் அந்த ஏடு குறிப்பிடுகிறது.

 பிரிட்டன் அமைச்சரவையில் நிலவி வரும் குழப்பமான சூழல் குறித்து விவரிக்கிறது தி இந்து வரைந்துள்ள தலையங்கம். அரசு நிர்வாகம் வரை சென்றுள்ள இந்தக் குழப்பங்கள், தவிர, ப்ரெக்ஸிட் குறித்த விவாதங்கள் இவை அனைத்தும் பிரதமர் தெரசா மே அவர்களை பலவீனப்படுத்துவதாகவும் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் பிரதமர் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுவதாகவும் சில அமைச்சர்கள் புகார்களுக்கு ஆளாகி வருவதாகவும் அது குறிப்பிடுகிறது.

அண்மையில் குவஹாத்தியில் நடைபெற்ற ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்துப் பாராட்டியுள்ளது தினமணி நாளிதழ். அதில், “1,200 பொருட்களும் சேவைகளும் 0%, 5%, 12%,18%,28% என்று ஐந்து அடுக்கு வரி விதிப்புக்கு ஜி எஸ் டி அறிமுகப்படுத்தப்பட்ட போது உட்பட்டன. அறிமுகப்படுத்தப்பட்ட போது இருந்த வரிகள் 28% மேலான பொருட்களுக்கு இப்போது இல்லை. கடந்த ஜூலை மாதம் 28% வரி விதிப்பில் இருந்த 250 பொருட்கள் இப்போது 50 பொருட்களாகக் குறைந்துள்ளன. அதே போல், ஆரம்பத்தில் ஆண்டொன்றுக்கு ரூ75 லட்சம் வரவு-செலவுள்ள நிறுவனங்கள் ஜி எஸ் டி வரம்புக்குள் இருந்தது  போய், கடந்த அக்டோபரில் ரூபாய் ஒரு கோடியாக மாறி, இப்போது ஆண்டு வரவு-செலவு ரூ.1.5 கோடிக்கு மேலேயுள்ள நிறுவனங்கள் மட்டுமே ஜி எஸ் டி வலைக்குள் வருகின்றன.” என்று அது குறிப்பிடுகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ் முரசு நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு வழிவகுக்கும் விதமாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்து, அந்த மசோதா விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்படும் என்று இந்திய அரசு, அந்நாட்டு உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வெளிநாடு  வாழ் இந்தியர்கள் வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இதையடுத்து, அதற்கு வழி வகுக்கும் விதத்தில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது குறித்து முடிவெடுக்கும்படி கடந்த ஜூலை 14ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்திய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்தச் சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வெளி நாடுகளில் வசிக்கும் சுமார் 25 மில்லியன் இந்தியர்கள் அஞ்சல் அல்லது இணையம் மூலமாகவோ, அல்லது தங்களின் பிரதிநிதியாக ஒருவரை நியமித்து அவர் மூலமாகவோ வாக்களிக்க முடியும். இப்போதைக்கு ராணுவத்தினர் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க முடியும். அவர்கள் தங்கள் பிரதிநிதியாக ஒருவரை நிரந்தரமாக நியமித்து, அவர்கள் மூலம் வாக்களிக்கலாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Pin It