நாளேடுகள் நவில்வன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், மசூத் அஸரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைப்பதற்கு. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்ஸிலில் சீனா நான்காவது முறையாக முட்டுக்கட்டை போட்டது எதிர்பாராத ஒன்று அல்ல என்று தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், பயங்கரவாதிகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய போதிலும், பாகிஸ்தானுக்கு எதிராக உலகநாடுகளுடன் தாங்கள் இணையாதிருப்பதே தங்கள் சொந்த நலனுக்கு நன்மை பயக்கும் என்று சீனா நம்புவதை வெளிப்படுத்துகிறது என்றும் அப்பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா 4-வது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஏற்கனவே மூன்று முறை முயற்சிகள் நடைபெற்றாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டது. மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என சீனா கூறி வருகிறது.

இந்த சூழலில்,ஜெனீவாவில் உள்ள  ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. பெரும்பாலான நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க தயராக இருந்த போதிலும், சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டது. இதனால், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ஐநாவுக்கு சீனா அனுப்பிய குறிப்பில், மசூத் அசாருக்கு எதிராக தடை கோரும் பரிந்துரையை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறி ஆதரிக்க மறுத்துள்ளது.  சீனா 4-வது முறையாக மசூத் அசாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.

சீனாவின் செயல்பாடு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பிற  உறுப்பு நாடுகளுக்கும் கடும் கோபத்தை அளித்துள்ளது. சீனா இதே கொள்கையை கடை பிடித்தால், மாற்று வழிகளை பின்பற்ற வேண்டி இருக்கும் எனவும்  பிற உறுப்பு நாடுகள் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. ”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It