நாளேடுகள் நவில்வன.

“பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்” என்ற தலைப்பில் தினத்தந்தி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

லைவலி போய் திருகுவலி வந்தது என்று தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் ஒரு வழக்குமொழி உண்டு. ஆனால், பாகிஸ்தானைப் பொறுத்தமட்டில், தலைவலியும் போகவில்லை, திருகுவலியும் போகவில்லை. ஒருபக்கம் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்துக்கொண்டு அவர்களை இந்திய எல்லைக்குள் ஊடுருவச்செய்து பயங்கரவாத செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொருபக்கம் ராணுவத்தின் அத்துமீறல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இது ஒருபக்கம் நடக்கும்போது, பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் 15, 13 வயதுள்ள ரவீனா, ரீனா ஆகிய 2 சகோதரிகளை கடத்திச்சென்று கட்டாயமாக மதமாற்றம் செய்து திருமணம் செய்துவைத்த சம்பவம் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் முடிந்து உடனடியாக பதின் மாவட்டத்தில் மாலா குமாரி மேக்வார் என்ற 16 வயது பெண்ணையும் கடத்திச்சென்றிருக்கிறார்கள்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

நீர் சேமிப்பின் அவசியம் பற்றி தினமலர் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“சமீபத்தில், பருவகால மழை குறித்து, ‘ஸ்கை மெட்’ என்ற பருவநிலை அறிவிப்பு நிறுவனம், பருவமழை சுமாராகத்தான் இருக்கும் என்றது. ஆனால், அக்கருத்து, முற்றிலும் சரியானது அல்ல என்பதை, இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தொடர் வறட்சிக்கு வாய்ப்பிலை என்பது, அதன் மையக் கருத்து. மிகப் பெரிய ஆறுகளில், அணை அமைத்து, மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ததும், அதை, ‘நவீன கால இந்தியாவின் கோவில்கள்’ என்று, நேரு வர்ணித்ததும் உண்டு. நாகரிகம் மற்றும் மக்கள் வாழ்வு, தண்ணீர் வசதி நிறைந்த இடத்தைச் சுற்றி அமைந்திருப்பதும் வரலாறாகும். ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து, அதிகம் பேசப்படும் இந்நேரத்தில், பெரிய அணைகளில் வண்டல் தேங்கி, அணை வலுவிழந்து, நிலநடுக்கம் வந்தால் என்னாகும் என்ற கவலையும் அதிகரித்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில், நிலத்தடி நீரைச் சுரண்டி விட்டோம். ஆகவே, நாம் தேர்வு செய்யும் பிரதிநிதிகள், தண்ணீர்த் தேவை, மாசுபடாத சூழ்நிலையில் ஏரி, குளங்கள் பாதுகாப்பு, அதிக தண்ணீரை வீணாக்காத சேமிப்பு உணர்வு ஆகியவற்றை தெளிவாக அறிந்து, அதற்கேற்ப அரசை வழிநடத்த முன்வர வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It