நாளேடுகள் நவில்வன.

இன்றைய நாளேடுகள், மின்னணு வர்த்தகத்தில் பிளாஸ்டிக் உபயோகம் பற்றியும், ஹப்பிள் டெலெஸ்கோப்புக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்தும் தலையங்கம் தீட்டியுள்ளன.

தி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், மின்னணு வர்த்தகத்தில், பொருட்களைப் பேக்கிங் செய்யும்போது, தேவையற்ற வகையில் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. 2015 ஆம் ஆண்டில், 3200 கோடி டாலர் மதிப்பில் இருந்த மின்னணு வர்த்தகம், 2020 ஆம் ஆண்டு, 7,300 கோடி டாலர் அளவை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொருட்கள் பேக்கிங் செய்வதில் கவனம் செலுத்தி, சுற்றுச் சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் உபயோகத்தைக் கணிசமாகக் குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டுமென அப்பத்திரிக்கை கூறுகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், 1990 முதல் விண்வெளியில், பூமியின் விளக்கொளிகளுக்கு அப்பாற்பட்ட அண்டத்தில் இருந்து கொண்டு, துல்லியமாகப் படம் பிடித்து சிறப்பாகப் பணியாற்றி வந்த ஹப்பிள் டெலெஸ்கோப், வயதின் காரணமாக செயல்திறனை இழந்துள்ளது என்று கூறுகிறது. 150 டெட்ரா பைட் அளவில், 13 லட்சம் படங்களை பூமிக்கு இதுவரை ஹப்பிள் டெலெஸ்கோப் அனுப்பியுள்ளது என்றும், பிரபஞ்சம் உருவான சமயத்தில், பிக் பேங் எனப்படும் வெடிப்பு நிகழ்ந்த காலகட்டத்தில் வெளியான ஒளியையும் கூட, ஹப்பிள் டெலெஸ்கோப் படம் பிடித்து அனுப்பியுள்ளது என்றும், பிரபஞ்சத்தில் மனித உபகரணங்களால் கண்டுபிடிக்க முடியாத கரும் சக்தி வியாபித்துள்ளது என்ற கணிப்பினை நிரூபிக்கத் தகுந்த வகையில், இந்த டெலெஸ்கோப்பின் செயல்பாடுகள் துணை புரிந்துள்ளதாகவும் அப்பத்திரிக்கை கூறுகிறது.

Pin It