நாளேடுகள் நவில்வன.

இன்றைய நாளேடுகள், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதைப் பாராட்டியும், தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்டது குறித்துப் பாராட்டியும் தலையங்கம் தீட்டியுள்ளன.

ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ் நாளிதழ், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வது என எடுக்கப்பட்ட முடிவு, ஒரு மைல்கல் என்று பாராட்டி, தலையங்கம் வெளியிட்டுள்ளது. மனுதாரரின் வழக்கு பற்றி அறிவதற்கான உரிமையை அங்கீகரித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையைத் தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான செலவுகள், தொழில்நுட்பம் மற்றும் இதர அம்சங்கள் குறித்து வரைவு திட்டம் தயாரிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது என்று அப்பத்திரிக்கை கூறுகிறது. இத் திட்டத்தின் மூலம், உச்சநீதிமன்றம், பொது மக்களுக்காகத் திறந்து விடப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் வெளிப்படைத் தன்மையும், மக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வும் அதிகரிக்கும் என்றும் அப்பத்திரிக்கை கூறுகிறது. வழக்குரைஞர்களும் தங்கள் செயல்பாடுகள் நேரடியாக மக்களால் பார்க்கப்படுகின்றன என்பதை உணர்ந்து, நியதிகளுக்குட்பட்டு நடந்து கொண்டு, அவசியமற்ற வாய்தாக்களைத் தவிர்ப்பர் என்றும், இதனால் கால தாமதங்கள் குறையும் என்றும் அப்பத்திரிக்கை மேலும் தெரிவிக்கிறது.

தி ஏஷியன் ஏஜ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள தலையங்கத்தில், 17 நாட்களாக, தாய்லாந்தின் வடக்குப் பகுதியிலுள்ள குகையில் வெள்ளம் சூழ்ந்ததால் சிக்கிக் கொண்ட 12 கால்பந்தாட்டச் சிறுவர்களையும், அவர்களது பயிற்சியாளரையும் தாய்லாந்தின் சிறப்பு கடற்படை மீட்டதைப் பாராட்டியுள்ளது. உலகமே மூச்சுவிட மறந்து இந்த மீட்புப் பணியை உற்று நோக்கி வந்தது என்றும், இந்த மீட்புப் பணி மிகவும் சிக்கலானதாகவும், 4 கி.மீ. தூரத்தில், இருளடர்ந்த, அபாயகரமான வெள்ளம் சூழ்ந்த பாதையில் செயல்பட வேண்டியிருந்ததாகவும் அப்பத்திரிக்கை கூறுகிறது. சிக்குண்டவர்களைக் காப்பாற்ற உலகமே ஒன்று திரண்டு, மீட்புப் பணிக்கு ஆதரவளித்தது, ஒட்டுமொத்த மனித இனத்தை உலகெங்கும் ஒருங்கிணைக்கும் விதமாக இருந்தது என்று அப்பத்திரிக்கை மேலும் கூறியுள்ளது.

Pin It