நாளேடுகள் நவில்வன.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்குமிடையே வர்த்தகப் போர் உருவாகும் அச்சுறுத்தல் குறித்து, தி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், “அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களும் சீன அதிபர் ஸீ ஜின்பிங் அவர்களும் ஜி-20 உச்சி மாநாட்டில், ஜூன் மாத இறுதியில் ஒசாகாவில் சந்திப்பதற்கு முன்னதாக, இருதரப்பு அதிகாரிகளும் பேச்சு நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தினால், நிலைமை சற்று சீராகும். இல்லையேல், இருபெரும் பொருளாதார நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான வர்த்தகப் போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இதனால் உலகப் பொருளாதாரத்திலும், சந்தைகளிலும், நாணய மதிப்பிலும் பெரும் பின்னடைவு ஏற்படும். இந்தியா உள்பட, அனைத்து நாடுகளும் கொள்கைகளை வகுப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதம் வரி விதிப்பு செய்தால், இந்தியாவுக்கு சற்று சாதகமான சூழல் உருவாவதற்கு வாய்ப்பு இருந்தாலும், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே உருவாகும் முழு அளவிலான வர்த்தகப் போரின் விளைவுகளை அது ஈடுகட்ட முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளது.

ஊரகப் பொருளாதார நிலை குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“2018-19 ஆம் ஆண்டுக்கான அரசுத் தரப்பு புள்ளி விவரங்களின்படி, அவ்வாண்டில் பல மாதங்களில் ஊரகப் பகுதிகளில் வெவ்வேறு பணிகளுக்கான கூலி குறைந்துள்ளது கவலைக்குரியது. வேளாண்துறையில் நிலவும் நெருக்கடி, நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. இவ்வாண்டு மழை பொய்த்தால் ஏர்படும் விளைவுகள் குறித்த அச்சம் நிலவுகிறது. புதிதாகப் பதவியேற்கும் மத்திய அரசு, விவசாய சந்தைகளை இணைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். அதன்மூலமே விவசாயப் பொருளாதாரம் தன்னிறைவு பெற முடியும். முடிந்தவரை, விவசாயம் அல்லாத துறைகளுக்கு ஊரகப் பகுதியில் ஊக்கமளிக்கப்பட வேண்டும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It