நாளேடுகள் நவில்வன.

இன்றைய நாளேடு, பொதுத்துறை போக்குவரத்து குறித்து, தலையங்கம் தீட்டியுள்ளது.

தி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில், திறன்மிக்க, சௌகரியமான பொதுத்துறைப் போக்குவரத்தைப் பொதுமக்களுக்கு அளிக்கும் விதமாக, கொள்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது எனக் கூறுகிறது. இதன்மூலம், போக்குவரத்து நெரிசலையும், காற்று மாசையும் குறைக்க முற்பட வேண்டுமென்று அவ்வறிக்கை கூறுவதாக அப்பத்திரிக்கை குரிப்பிட்டுள்ளது. நகர்ப்புறத்தில் பொதுப் போக்குவரத்து மக்களை ஈர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்று அப்பத்திரிக்கை கூறுகிறது. அதற்குத் தக்கவாறு, குடியிருப்புக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வடிவமைக்கப்பட வேண்டுமென்று அப்பத்திரிக்கை கூறுகிறது.

இன்றைய தமிழ் நாளேடு, தினமணி, பருவநிலை மாற்றம் குறித்துத் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில்,

“பருவநிலை மாற்றம் என்ற பேராபத்தை உலகம் எதிர்கொள்கிறது. 2052 க்குப் பிறகு, உலக வெப்ப நிலையில் 0.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்தாலும் கூட, அதன் விளைவு பேரழிவை நோக்கி இட்டுச் செல்லும் அபாயம் காத்திருக்கிறது. அனல்காற்று, கடுமையான மழை, பெரும் வறட்சி, வெள்ளப் பெருக்கு என்று பல்வேறு இயற்கைப் பேரிடர்களை உலகம் சந்திக்க நேரிடும்.

2015 இல் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட தட்பவெப்ப நிலை அளவும்கூடப் போதுமானதல்ல என்கிற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. 1850 முதல், 1900 ஆண்டு வரையிலான இயந்திரப் புரட்சிக் காலத்துக்கு முற்பட்ட அளவைவிட, 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமான அளவுக்கு உலகின் சராசரி வெப்ப நிலையை இலக்காக்கி இருந்தது பாரீஸ் ஒப்பந்தம். இப்போது, ஏற்கனவே 150 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்த நிலையைவிட, உலகம் 1 டிகிரி செல்ஷியஸ் அதிகமான வெப்பம் அடைந்திருக்கிறது. இன்னும் 0.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரித்தால் வறட்சியும் வெள்ளப் பெருக்கும் புயலும் கடல் அமிலமயமாதலும் மேலும் அதிகரிக்கக் கூடும்.

2016 முதல் 2035 வரை ஆண்டுதோறும் 2.4 டிரில்லியன் டாலர் எரிசக்தித்துறையில் மாற்றம் ஏற்படுத்த வளர்ச்சி அடையும் நாடுகள் ஒதுக்கினால் மட்டுமே, அதிகரித்துவரும் வெப்பமயமாதலைத் தடுக்க முடியும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

Pin It