நாளேடுகள் நவில்வன.

தி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், எரியாற்றல் தேவை குறித்த தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“உலகிலேயே அதிவேக வளர்ச்சி காணும் எரியாற்றல் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. எரியாற்றல் துறையில் இந்தியாவின் முதலீடு, 2018 ஆம் ஆண்டில் 12 சதமாக இருந்தது என்றும், அது உலகிலேயே அதிகமானது என்றும் சர்வதேச எரியாற்றல் மையம் கூறியுள்ளது. இந்நிலையில், எரியாற்றல் துறையில் செயல்திறனை அதிகரிக்கவும், மின்சக்தி, பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை நவீனப்படுத்தவும் எரியாற்றல் பொருளாதாராத்தில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. உலக சராசரி அளவை ஒப்பிடுகையில், இந்தியாவில் நபர் ஒன்றுக்கு எரியாற்றல் பயன்பாடு மூன்றில் ஒரு பங்கு தான். இருப்பினும், பெட்ரோலிய எரியாற்றலைத் தவிர்த்து, மின்சக்தியால் இயங்கும் வாகனங்களை பொதுப் போக்குவரத்துக்கு உபயோகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துதல் நன்று.”

என்று குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா தேர்தல் குறித்து தி ஏஷியன் ஏஜ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“ ஆளும் கூட்டணியான லிபரல் – நேஷனல் கூட்டணிக்கு சாதகமாக வாக்களித்து பிரதமர் ஸ்காட் மாரிஸன் அவர்களை பிரதமராக நீடிக்க வைத்து ஆச்சரியத்தை அள்ளி வீசியுள்ளது ஆஸ்திரேலியா தேர்தல். எதிர்க்கட்சியான லேபர் கட்சி, உலக வெப்பமயமாதலைத் தடுப்பதை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது பலனளிக்கவில்லை. இதனால் 1.5 லட்சம் வேலை வாய்ப்பு நழுவும் என்பதோடு, இதற்கான முதலீடுகளும் மிக அதிக அளவில் தேவைப்படும் என்பதால் எதிர்க் கட்சியின் பிரச்சாரத்தில் தோல்வி ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தை முன்னிறுத்திய ஆஸ்திரேலிய தேர்தலில் வாக்களித்த மக்கள், ஆய்வாளர்களின் கணிப்பைப் பொய்யாக்கியதோடு, மாற்றம் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் நிரூபித்துள்ளனர்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It