நாளேடுகள் நவில்வன.

இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில்  ஏவியது குறித்து, தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,

“ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 5.30 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை இந்த ராக்கெட் சுமந்துகொண்டு சென்றது.

இதற்கான இறுதிகட்ட பணியான 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று அதிகாலை 4.27 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டின் செயல்பாட்டை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதுடன், விண்வெளி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ராக்கெட் ஏவுவதை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் அளவில் ‘கேலரி’ அமைக்கப்பட்டிருந்தது. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் பெயர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

சீனாவின் பிஆர்ஐ திட்டத்துக்கு மாற்றாக, இலங்கையில் மூன்று நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

”சீனாவின் பிஆர்ஐ திட்டத்துக்கு மாற்றாக, இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து, கொழும்பு துறைமுக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன என்று, நிக்கி ஏஷியன் ரெவ்யூ அறிக்கை தெரிவிக்கிறது. அண்மையில் விரிவாக்கப்பட்ட கிழக்கு கண்டெய்னர் டெர்மினலில் வரும் மார்ச் மாதம் பணிகள் துவங்கவுள்ளன. இது சீனாவின் பிஆர்ஐ திட்டத்துக்கு மாற்றாகக் கருதப்படுகிறது. சீனாவின் பிடியிலிருந்து விலகும் நோக்கில், அண்மையில் இலங்கை பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஹம்பந்தோட்டா துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு தாரை வார்த்தபின், விழித்துக் கொண்ட இலங்கை, அத்துறைமுகம், ராணுவப் பயன்பாட்டிற்கு சீனாவால் உபயோகப்படுத்தப்படக் கூடாது என்று வலியுறுத்திய போதிலும், சீனா அதனைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் தற்போது விளங்கும் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில், கடந்த மாதம் அமெரிக்காவுடன் இணைந்து, இலங்கை கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொண்டது. இதன் மூலம், தங்கள் நாட்டின் இறையாண்மையை சீனா உதாசீனப்படுத்தக் கூடாது என்ற செய்தியை, இலங்கை வெளிப்படுத்த முற்பட்டுள்ளது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It