நாளேடுகள் நவில்வன.

“உலகிலேயே முப்பரிமாண அச்சில் உருவான முதல் கழிவறை”

என்ற தலைப்பில், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ், தமிழ் முரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில்

”எதிர்காலத்தில் வீடுகளுக்கான கழிவறைகள் விரைவாகவும் மலிவாகவும் முப்பரிமாண முறையில் அச்சிடப்படலாம். முப்பரிமாண அச்சில் கழிவறைகளை உலகிலேயே முதன்முதலாகத் தாங்கள் உருவாக்கியுள்ளதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

முப்பரிமாண அச்சு வேலையைச் செய்யும் இயந்திரம், கழிவறையை உருவாக்கக் கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரமே எடுக்கிறது. பொதுவாக இதுபோன்ற கழிவறைகளைத் தயாரிக்க $6,000லிருந்து $7,000 ஆகும். ஆனால் முப்பரிமாண அச்சில் உருவாக்கப்படும் கழிவறைக்கு அதில் பாதிச் செலவுதான் ஆகும் என்று ஆய்வுக் குழுவினர் கூறினர். 2014ஆம் ஆண்டிலிருந்து வீவக வீடுகளுக்கும் சில கொன்டோமினியங்களுக்கும் கழிவறைகள் தொழிற்சாலைகளில் முன்னதாகவே தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டு பொருத்தப்படுகின்றன. இப்புது முயற்சியால் பொருத்துவதற்கான நேரமும் மிச்சப்படும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

வரவிருக்கும் உலக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி வாய்புக்கள் குறித்து, தி பயோனியர் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“1983 ஆம் ஆண்டு, கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை இந்தியா வென்றதை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறோம். இந்த மகத்தான வெற்றி, உலக மேடையில் இந்திய கிரிக்கெட்டின் வரவைப் பறைசாற்றியது. அன்று முதல், உலக மேடையில் இந்திய கிரிக்கெட்டின் ஆதிக்கம் துவங்கியது எனலாம். தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. ஐபிஎல் போட்டிகளில் ஆட்டக்காரர்களின் சாதனைகளைக் கணக்கில் கொண்டு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகள் தங்கள் அணிகளில் ஆடும் வீரர்களை மாற்றியமைக்கத் தூண்டப்பட்டுள்ளன. 1983 ஆம் ஆண்டு பெற்ற வெற்றியைப்போல், 2019 ஆம் ஆண்டிலும் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவது கடினம்போல் தோன்றுகிறது. விராட் கோலி, தோனி உள்ளிட்ட தலைசிறந்த வீரர்களை இந்திய அணி பெற்றிருந்தாலும், இம்முறை போட்டி பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It