நாளேடுகள் நவில்வன.

இந்திய, இலங்கை உறவுகள் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது. அதில்,

“பயங்கரவாதத் தாக்குதலால் அண்மையில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவ இந்தியா முன்வர வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் குறுகிய கால இலங்கைப் பயணம் அமைந்தது. இந்தப் பயணத்தின்போது, இலங்கையில் முன்பு நிலவிவந்த  உள்நாட்டுப் போர் போன்ற சூழலை அந்நாட்டு மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதையும் மோதி அவர்கள் வலியுறுத்தினார். இலங்கையுடனான உறவுகளை முன்னெடுத்துச் செல்லும்போது இந்தியா கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. உயர்மட்டத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமான ஒன்றாகும். முற்காலத்தில் உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்களைச் சரிசெய்ய, இலங்கைத் தாக்குதல் இந்தியாவுக்கு வய்ப்பளித்துள்ளது விந்தையே. இந்தியாவின் முயற்சிகள், நெளிவுசுளிவுகளுடன் கூடிய நீண்ட பாதையில் செல்ல வேண்டியுள்ளது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

நாடகமே வாழ்க்கை என்ற தலைப்பில், தினமணி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“கலையுலகைப் பொறுத்தவரை கடந்த திங்கள்கிழமை ஒரு கருப்பு தினம். இரண்டு மாபெரும் கலைஞர்களை இந்தியா இழந்திருக்கிறது. அந்த இரண்டு கலைஞர்களுமே சென்னையுடன் தொடர்புடையவர்கள் என்பதால் தமிழகத்தின் துக்கம் சற்று கூடுதலாகவே இருக்கிறது.

திரைப்படமும், தொலைக்காட்சியும், இணையமும், யூ டியூப் சேனல்களும் பிரபலமாகிவிட்ட நிலையிலும், நாடகமேடையில் ஒருவரால் தனது திறமையின் அடிப்படையில் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நிரூபித்ததுதான் கிரேஸி மோகன் என்கிற கலைஞரின் மிகப்பெரிய சாதனை. நாடக நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று  மேடையிலும், திரையுலகிலும், தொலைக்காட்சியிலும் வெற்றி பவனி வந்தவர் கிரேஸி மோகன்.

நகைச்சுவை நாயகன் கிரேஸி மோகன் என்றால், பன்முகக் கலைஞர் கிரீஷ் கார்னாட். தனது 20ஆவது வயதிலேயே, “யயாதி”, “துக்ளக்” என்கிற இரண்டு நாடகங்களைப் படைத்துத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற கிரீஷ் கர்னாட், வேலை தேடி வந்த இடம் சென்னை. 1963 முதல், 1970 வரை பணியாற்றிய பிறகு, தனது பணியைத் துறந்து சென்னையிலிருந்த ’மெட்ராஸ் பிளேயர்ஸ்’ என்ற நாடகக்குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார் அவர். இன்றுவரை நாடக வரலாற்றில் கிரீஷ் கர்னாடின் துக்ளக் நாடகம் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

ஞானபீட விருது, பத்மபூஷன் விருது என்று தலைசிறந்த விருதுகளைப் பெற்ற கிரீஷ் கர்னாடின் மறைவும், தமிழக மக்களின் மனதில் நகைச்சுவை சிம்மாசனம் போட்டு அமர்ந்த கிரேஸி மோகனின் மறைவும் ஈடுசெய்ய முடியாத நாடகமேடை இழப்புக்கள். நாடகம்தான் அவர்கள் இருவருக்குமே வாழ்க்கையாக இருந்தது. வாழ்க்கையே ஒரு நாடகம்தான் என்று அவர்களது மரணம் தனது முடிவுரையை எழுதியிருக்கிறது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It