நாளேடுகள் நவில்வன.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோதி ஆற்றிய ஆணித்தரமான உரையைப் பாராட்டி, தி ஹிந்து நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“இம்மாதம் மாலத்தீவுகளக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோதி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பொருள் பொதிந்த உரையாற்றினார். இருநாடுகளுக்கும் இடையே நிலவும் சிறப்புமிக்க உறவை எடுத்துரைத்த அவர்,  இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள பிற நாடுகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார். மாலத்தீவின் கரைகளைத் தொடும் கடல் அலைகள், இந்தியக் கடற்கரையையும் தொட்டு, இருநாடுகளுக்கும் இடையே நிலவும் அமைதி, நல்லுறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றை எடுத்துரைக்கின்றன என்று கூறினார். கடல்சார் கூட்டுறவு, ஜனநாயகம், பல்நிலைத்தன்மை, பருவநிலை ஆகியவற்றிலும், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதப் பிரச்சாரம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்திலும் இருநாடுகளுக்கும் இடையே நிலவும் ஒத்திசைவை எடுத்துரைத்தார் பிரதமர். 1658 ஆம் ஆண்டு கடற்பாறையால் கட்டப்பட்ட மசூதியைப் பராமரிக்கும் பணிக்கு நிதியுதவி அளிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது என்பதைப் பிரதமர் குறிப்பிட்டார்.

பின்னர், இலங்கைக்குக் குறுகிய காலப் பயணம் மேற்கொண்ட பிரதமர், இதே செய்தியை எடுத்துரைத்தார். பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளான தேவாலயத்துக்கு விஜயம் செய்து உயிரிழந்தோர்க்கு அஞ்சலி செலுத்தினார்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோதி கலந்து கொள்வது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றபின், நரேந்திர மோதி அவர்கள் மேற்கொள்ளும் முதல் பல்நிலை உச்சிமாநாடு, கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு உச்சிமாநாடாகும். ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்துவது அவசியமாகும். படிப்படியாக, பயங்கரவாத்துக்கு எதிராக செயல்படும் அமைப்பாக இது உருவாகி வருகிறது. இப்பிராந்தியத்தில் வர்த்தக ஏற்பாடுகளுக்கு அடித்தளமாக இவ்வமைப்பு அமையும் வாய்ப்புக்கள் உள்ளன.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It