நாளேடுகள் நவில்வன.

‘வேகமெடுக்கும் நிர்வாகம்’என்ற தலைப்பில், தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

த்திய அரசு என்றாலும் சரி, மாநில அரசு என்றாலும் சரி, வளர்ச்சிப்பணிகளை, மேம்பாட்டு பணிகளை, மக்கள் நலப்பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமென்றால், நிர்வாகம் ஆற்றும் பணிகளில்தான் இருக்கிறது. நிர்வாகம் என்றால் அமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு இருக்கிறது. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்–மந்திரியாக இருந்தபோது, தினமும் காலையில் அரசு அலுவல் தொடங்குவதற்கு முன்பே அலுவலகத்துக்கு செல்வது வழக்கம். அலுவலகத்துக்கு சென்றவுடன் தான் அன்று ஆற்றவேண்டிய பணிகளை அட்டவணைப்படுத்தி, அதற்கேற்ப மந்திரிகள், அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், பார்வையாளர்களையும் சந்திப்பது வழக்கம். அதே வகையான முறையில்தான் இப்போதும் பணிகளை ஆற்றத்தொடங்கியிருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் செயலாளர்கள் மட்டுமல்லாமல், இயக்குனர், துணைச்செயலாளர்கள் மட்டம் வரை அதிகாரிகளிடம் அவரே நேரடியாக பேசி உத்தரவுகள் பிறப்பிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த துறை ஆற்றும் பணிகள் தொடர்பான தகவல்களையும் கேட்டுப்பெறுகிறார். முக்கிய அதிகாரிகள் எல்லாம் அவசரமாக பிரதமரை தொடர்புகொள்ளவேண்டுமென்றால், அதற்காக நேரம் கேட்டு காத்திருக்க தேவையில்லாத அளவில் எல்லோருக்கும் அவரது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார்.

தன்னைப்போலவே மந்திரிகளும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த வாரம் அமைச்சரவையை கூட்டிய நேரத்தில், எல்லா மந்திரிகளும் காலை 9.30 மணிக்கே அலுவலகம் வந்துவிடவேண்டும். வீட்டில் இருந்தே வேலைபார்க்கும் முறையை தவிர்க்கவேண்டும். மற்ற அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழவேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களை சந்திக்க நேரம் ஒதுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக,           5 ஆண்டுகாலத்தில் அவர்கள் செயல்படுத்தப்போகும் திட்டங்களை   வகைப்படுத்த   வேண்டும்.   முதல்             100 நாட்களுக்குள் அதை செயல்படுத்த தொடங்க வேண்டும் என்பது போன்ற பல அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதே வகையான அறிவுரைகளை கடந்த வாரம் திங்கட்கிழமை அவர் கூட்டிய கூட்டத்தில் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயித்து, அவரவர் துறை எந்தெந்த கட்டங்களில் எவ்வளவு பணிகளை முடிக்கவேண்டும் என்பதையும் வகைப்படுத்தி, 100 நாட்களுக்குள் அவர்கள் எடுத்த முடிவுகளுக்கெல்லாம் அனுமதிகளைப் பெற்று வேகமாக செயல்படுத்தவேண்டும் என்று கூறியிருக்கிறார்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி நாளிதழ், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குறித்த தலையங்கத்தை வெளியிட்டுள்ளது. அதில்,

“16 ஆவது மக்களவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 46 மசோதாக்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது என்று பிரதமர் நரேந்திர மோதி அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது. இன்று தொடங்கவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பல மசோதாக்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

முத்தலாக் விவாகரத்து முறையைத் தடை செய்யும் முஸ்லிம் மகளிர் (திருமண உரிமைப் பாதுகாப்பு) மசோதா, இந்திய மருத்துவக் கவுன்ஸில் திருத்த மசோதா, பாலியல் குற்றங்களில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் போக்சோ திருத்த மசோதா, மத்திய பல்கலைக் கழகங்கள் திருத்த மசோதா, மனித உரிமைப் பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் தேங்கிக் கிடைப்பதை  எதிர்க்கட்சிகள் தங்கள் வெற்றியாகக் கருதுவதும், மசோதாக்கள் காலாவதியாகிப் போவதைப் பற்றிக் கவலைப்படாமல் ஆளும் கட்சி ஆட்சியில் தொடர்வதும் முறையான ஜனநாயகம் அல்ல.

இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோதி அரசால் காலாவதியான மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்படுவது வரவேற்புக்குரியது!”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It