நாளேடுகள் நவில்வன.

“வர்த்தக வரிகள் குறித்து இந்தியா, அமெரிக்கா பேச்சு” என்ற தலைப்பில் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு பத்திரிக்கை தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக வரிகளையும் தன்னைப்பேணித்தனத்தையும் பற்றி இன்று பேசவுள்ளன.  அமெரிக்க ஏற்றுமதிகள் மீது இந்தியா விதிக்கும் உயர் வரிகள் ஏற்கத்தகாதவை என்று திரு டிரம்ப் இவ்வாரம் டுவிட்டரில் மீண்டும் கூறியுள்ளார்.

திரு மோடி சொந்த மக்களைக் காட்டிலும் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு முக்கியத்துவம் தருபவர் என்ற கருத்துக்கு முரணான விதத்தில் அவரது நிர்வாகத்தின் அனைத்துலக வர்த்தகக் கொள்கைகள் அமைந்துள்ளன. உள்நாட்டு உற்பத்தித்துறையைப் பாதுகாக்க நினைக்கும் இந்தியா, இன்னும் மலிவான விலையில் விற்கப்படும் அமெரிக்க ஏற்றுமதிகள் மீது இந்த வரிகளை விதிக்கிறது.  கடந்த மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி, இந்திய நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் பல மில்லியன் கணக்கான இளையர்களுக்கு வேலைகளை உருவாக்கித் தருவதற்காகவும் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.

தேர்தல் சமயத்தில் தள்ளிவைக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கப்போவதாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் அரசதந்திரக் குழு தெரிவித்தது.

‘யுஎஸ்டிஆர்’ எனப்படும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிக் குழு, இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலையும் தகவல்  தொழில்நுட்ப அமைச்சின் சில முக்கிய அதிகாரிகளையும் சந்திப்பர்.

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் நாடலாம் என்பது இந்தியாவின் கவலையாக உள்ளது. அவ்வாறு நடந்தால் இந்தியாவுக்குள் அளவுக்கு அதிகமான இறக்குமதிகள் குவிந்து  உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி பாதிப்படையலாம் என்று இந்திய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் வர்த்தக நிறுவனங்களின் பொறுப்பு குறித்து, தி ஹிந்து தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம், 52 உற்பத்தியாளர்கள், பிராண்ட் உரிமையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் தங்கள் பொறுப்பை நிறைவேற்றாததற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிறுவனங்கள் உள்ளிட்ட, அதிக பிளாஸ்டிக் கழிவுகளுக்குக் காரணமாக விளங்கும் நிறுவனங்கள், சுறுசுறுப்புடன் செயலில் இறங்க வேண்டிய தருணம் இது. உற்பத்தியாளர்களின் நீட்டிக்கப்பட்ட பொறுப்பு என்ற கொள்கை பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் கொண்ண்டுவரப்பட்டு எட்டு ஆண்டுகள் கழிந்து விட்டன. இருப்பினும், முனிசிபல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியங்கள், பெருநிறுவனங்களை பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, பதப்படுத்த வைக்கத் தவறிவிட்டன. 2016 ஆம் ஆண்டு, கொண்டுவரப்பட்ட கடுமையான விதிகளும், பின்னர் இரு ஆண்டுகள் கழித்து அவற்றின்மீது கொண்டு வரப்பட்ட திருத்தங்களும் போதிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இதனால், நகர்ப்புறவாசிகளின் கண்களில் படாத புறநகர்ப் பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்து வருகின்றன. வருங்காலத்தில் இந்தப் பிரச்சனை மேலும் தீவிரமைடையும். 2017 ஆம் ஆண்டில், சில்லரை வணிகத்தில், இணையதள வர்த்தகம், 3,850 கோடி டாலர் அளவில் இருந்தது. 2026 ஆம் ஆண்டுக்குள் இது 20,000 கோடி டாலர் அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிகளவில் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் இணையதள வர்த்தகப் பொருட்களால் பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சனை பெருமளவில் கூடும் என்பது கண்கூடு. எனவே, பிளாஸ்டிக் அல்லாத, நவீன பேக்கிங் முறை ஒருபுறமும், கழிவுகளைத் தரம் பிரித்து, சேகரித்து அனுப்பும் முறை மறுபுறமும் என, இருமுனைத் தீர்வு இப்பிரச்சனைக்கு முடிவுகட்டும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

Pin It