நாளேடுகள் நவில்வன

இன்றைய நாளேடுகள், இந்தியாவுக்கும் ஃபிரான்ஸுக்கும் இடையேயான செயலுத்தி உறவுகள் குறித்தும், எஃகுப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த இறக்குமதி வரி குறித்தும், குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் மலையேற்றப் பயிற்சியாளர்கள் உயிரிழந்தது குறித்தும் தலையங்கம் தீட்டியுள்ளன.

தி ஹிந்து நாளிதழ், ஃபிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அவர்களின் இந்தியப் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள், ஸ்திரமற்ற உலகச் சூழலில்,  இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது உறுதி என்று எழுதியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதி குறித்து வெளியிடப்பட்ட கூட்டுத் தொலைநோக்கு அறிக்கை, அப்பகுதியில் சீனா மேற்கொள்ளும் ஆதிக்க முயற்சிகளுக்குப் பதிலடியாக உள்ளது என்று அப்பத்திரிக்கை கூறுகிறது. சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பு மாநாட்டில் வெளிடப்பட்ட, ஜெய்தாபூர் அணுமின் நிலையத்திற்கான மறுஅர்ப்பணிப்பு, பருவ நிலை மாறுபாடுகள் குறித்த கூட்டுத் திட்டங்கள் ஆகியவை, பாரீஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததற்கு மாற்றான எதிர் நடவடிக்கையாக உள்ளது என்று அப்பத்திரிக்கை மேலும் கூறுகிறது. ஃபிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அவர்களும், பிரதமர் திரு நரேந்திர மோதியும் இணைந்து, மலிவான விலையில் சூரிய மின்சக்தி அளிப்பதை உறுதி செய்வோம் என்று அறிவித்ததன் மூலம், வளர்ந்து வரும் நாடுகளுக்கு இத்துறையில் ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கியுள்ளனர் என்றும், இது, சர்வதேச வர்த்தக அமைப்புக்கு சவாலாக இருக்குமென்றும் அப்பத்திரிக்கை மேலும் கூறுகிறது.

தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழ், உலகப் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகத்தில் அடியெடுத்து வைத்துள்ள இவ்வேளையில், அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்ப் அவர்கள், எஃகு மற்றும அலுமினியப் பொருட்கள் மீது முறையே 25 மற்றும் 10 சதம் இறக்குமதி வரி விதித்திருப்பதன் மூலம், வர்த்தகப் போர் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் பெருகியுள்ளன என்று எழுதியுள்ளது. இவ்விரு பொருட்களின் இறக்குமதி அதிகரித்திருப்பதன் மூலம், அமெரிக்காவில் உள்நாட்டுப் பாதுகாப்பில் சவால்கள் எழுந்துள்ளன என்று, அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சகம் ஆய்வு வெளியிட்டதைத் தொடர்ந்து, அதிபர் இறக்குமதி வரியை அறிமுகப்படுத்தியுள்ளார் என்றும், இந்த நடவடிக்கை துரதிர்ஷ்ட வசமானது என்றும் அப்பத்திரிக்கை கூறியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்மட்ட பொருளாதார ஆலோசகர் திரு கேரி கோன் ராஜினாமா செய்துள்ளார் என்று அப்பத்திரிக்கை கூறுகிறது.

தி ஏஷியன் ஏஜ் பத்திரிக்கை, மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு குன்றுகளில், குரங்கணி வனப்பகுதியில், பெண்கள் தினத்தை முன்னிட்டு மலையேற்றப் பயிற்சியாளர்கள் மலை ஏறிக் கொண்டிருந்தபோது, துரதிருஷ்டவமாக காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர் என்றும், காட்டுத் தீ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இன்றி அவர்கள் ஒழுங்கற்ற முறையில் செய்வதறியாது மாட்டிக் கொண்டனர் என்றும் கூறியுள்ளது. காட்டுத் தீ உருவானதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் இது குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அப்பத்திரிக்கை கூறுகிறது. வனத் துறையிடமிருந்து சரியான அனுமதி பெறாமல் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் இதற்கான ஒழுங்குமுறையை அரசு நிரணையிக்க வேண்டும் என்றும் அப்பத்திரிக்கை கூறுகிறது. விபத்தில் உயிரிழந்தோர், பாதுகாப்பான மேலிடங்களுக்குச் செல்லாமல், தீ கொழுந்து விட்டு எரியும் பகுதி வழியாக கீழிறங்க முயற்சித்தனர் என்றும் அப்பத்திரிக்கை கூறுகிறது. இத்தகைய இடர்ப்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அவர்களுக்குப் போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை என்று அப்பத்திரிக்கை கூறுகிறது.

இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழ், அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சூரிய சக்தி மாநாடு குறித்துச் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “ இலங்கையில் சூரிய சக்தி தொழில்நுட்ப அபிவிருத்திக்கென இந்திய அரசு 100 மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியுள்ளது.

கடந்த 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் சர்வதேச சூரிய சக்தி குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சூரிய சக்தி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.  இதன்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சர்வதேச ரீதியாக 46 நாடுகளை ஒன்றிணைத்த வகையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், அபிவிருத்தி வங்கி தலைவர்கள், புதுப்பிக்கத்தக்க சக்திவள வர்த்தக தலைவர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.  இம்மாநாட்டின் போது சூரிய சக்தி தொழில்நுட்ப  மாநாட்டுத் திட்டங்கள் அறிக்கை வடிவில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் நிதியுதவியின் கீழ் 15 நாடுகளுக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சூரிய சக்தி தொழில்நுட்பம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன்படி இலங்கைக்கான சூரிய சக்தி தொழில்நுட்பத்திற்கென 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதன்மூலம் 200 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கான சூரிய சக்தி தொழில்நுட்பம் மற்றும் அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் என்பவற்றிற்கான சூரிய சக்தி தொழில்நுட்பத்தை நிறுவுதல் என்பன இம்முதலீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

இம்மாநாட்டின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி சூரிய சக்தி திட்டத்தினால் பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஏற்பட்ட நேர்மறையான காலநிலை மாற்றத்தை நினைவு கூர்ந்தார்.

அனைத்து நாடுகளும் தமது சக்திவலு தேவையை நிறைவு செய்வதற்கான வாய்ப்பேற்படுத்தல், பொதுவான கட்டமைப்பு ஒன்றின் மூலமாக ஒன்றிணைந்து  செயற்படல், சூரிய சக்தி தொடர்பான தொழில்நுட்பத்தை விருத்தி செய்தல் ஆகியவற்றைப் பிரதான நோக்கமாகக்  கொண்டு சூரிய சக்தி மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.” என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It