நாளேடுகள் நவில்வன

இன்றைய நாளேடுகள், காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் அபார சாதனைகளைப் பாராட்டியும், பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு விடுக்கப்பட்ட வாழ்நாள் தடை பற்றியும் விமரிசித்துள்ளன. சிறு, குறு, தொழில் வளர்ச்சியின் அவசியம் குறித்துக் கருத்து தெரிவித்து தமிழ்நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் குறித்து  இலங்கையிலிருந்து வெளிவரும் நாளேடு தலையங்கம் வெளியிட்டுள்ளது. இந்திய மாணவி யோகாசனத்தில் கின்னஸ் சாதனை புரிந்துள்ள செய்தியை சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு வெளியிட்டுள்ளது.

தி பயோனியர் நாளிதழ், ’காமன்வெல்த் போட்டிகளில் அபார சாதனை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில், இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் அண்மையில் ஆஸ்திரேலியா, கோல்டு கோஸ்ட்டில் நிறைவுற்ற காமன்வெல்த் போட்டிகளில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் மிகவும் பாராட்டுக்குரியவை என்று குறிப்பிட்டுள்ளது. வழக்கமான போட்டிகளான மல்யுத்தம், குத்துச் சண்டை, பளு தூக்குதல் தவிர, புதிதாக, இம்முறை, பாட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளிலும் அபார சாதனை நிகழ்த்தபட்டுள்ளது என்று அப்பத்திரிக்கை கூறுகிறது. அண்மைக் காலத்தில் அறிவியல் ரீதியாகவும், இலக்கு நோக்கியும் கையாளப்பட்ட விளையாட்டுத் துறைக் கொள்கைகளின் விளைவாகவும், உலகத்தரம் வாய்ந்த பயிற்சிக் கட்டமைப்புக்களும் பலனை நல்கியுள்ளன என்று அப்பத்திரிக்கை மேலும் கூறுகிறது. மேலும்,  இந்த காமன்வெல்த் போட்டிகளில், 16 வயதான மனு பேகர் முதல், 35 வயதான மேரி கோம் வரை, இந்திய வீராங்கனைகளின் வியத்தகு சாதனைகள், இப்போட்டிகளின் மூலமாக, இந்தியாவில் பெண்கள் அதிகாரமளிக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பறைசாற்றுகின்றன என்றும் அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், ’நீதித்துறையின் பலத்த அடி’ என்ற தலைப்பில், பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் திரு நவாஸ் ஷெரீஃப், வாழ்நாள் முழுவதும் பொதுப்பணிகளில் பணியாற்றவோ, தேர்தலில் பங்கேற்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது குறித்து விமரிசித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு, ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திரு நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது என்று அப்பத்திரிக்கை கூறுகிறது. மதக்கோட்பாட்டின் அடிப்படையில், பாரபட்ச அணுகுமுறையுடன், நீதிபதிகள் இத்தீர்ப்பு வழங்கியது, பாகிஸ்தானில் ஜனநாயகம் எந்த அளவிற்கு வலுவிழந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதாக அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி நாளிதழ், தனது தலையங்கத்தில், சிறு, குறு, தொழில் வளர்ச்சியின் அவசியம் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ளது. அதில், ”சில நாட்களுக்கு முன்பு ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனம் தனது முதலாவது இந்திய உற்பத்தித் தொழிற்சாலையின் கட்டமைப்பை நிறுவுவதற்கான விழாவை ஆந்திரா மாநிலம், அனந்தபூரில் நடத்தியது. ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்திசெய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 31–ந்தேதி கிருஷ்ணா மாவட்டம், மல்லவள்ளியில் பஸ்கள் உற்பத்திக்காக அசோக் லேலண்டு நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்காக சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டியிருக்கிறார். குஜராத் போன்ற மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது.  குஜராத் மாநில வளர்ச்சி 7.80 சதவீதமாக இருந்தது, 9.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி பெருகினால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும். இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றால் உற்பத்தி பெருமளவில் உயர்ந்தாகவேண்டும். அடுத்த சிலஆண்டுகளுக்கு வேளாண்மை, வங்கிப்பிரிவு, நிதிச் சேவைகள் போன்ற பிரிவுகளிலும், அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் பெருமளவில் நிச்சயமாக வேலைவாய்ப்பு வளர்ச்சியைக் காணமுடியாது. ஆக வேலைவாய்ப்புகள் பெருகவேண்டுமென்றால், தொழில்துறை அதிலும் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பெருமளவில் வளர்ந்தால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும். கனரக தொழில்கள் வளர்ந்தால் எல்லாமே எந்திரமயமாகியிருக்கும் நிலையில் உற்பத்திபெருகும். ஆனால், அந்தளவிற்கு வேலைவாய்ப்பு பெருகும் என்று சொல்லமுடியாது.

மத்திய அரசாங்கம் கூட இந்த ஆண்டு குறு, சிறு நடுத்தர தொழில்கள் மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியிருக்கிறது. நாடு முழுவதிலும் இத்தகைய 6 கோடி தொழில் நிறுவனங்களில் 11 கோடி பேர் பணியாற்றுகிறார்கள். இத்தகைய நிறுவனங்கள்தான் மொத்த உற்பத்தியில் 45 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீத ஏற்றுமதி குறு, சிறு நடுத்தரதொழில்கள் மூலமாகத்தான் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டிலும் 15 லட்சத்து 61 ஆயிரம் தொழில்முனைவோர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை நடத்துவதாக பதிவுசெய்துள்ளனர். ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 331 கோடி முதலீட்டில், 99 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு இந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்புகள் அளிக்கிறது. வேலைவாய்ப்புகளை பெருக்க அரசு இதுபோன்ற சிறு தொழிற்சாலைகளை வளர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், நமது பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற சிறு தொழில்களில் திறன்வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் வகையிலான படிப்புகளை உருவாக்கவேண்டும்.” என்று கூறியுள்ளது.

இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழ் வெளியிட்டிருந்த தலையங்கத்தில் தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் குறித்தும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட நாள் நல்லுறவுகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளது. அதில், “சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பொதுவான சிறப்பான பண்டிகையாகச் சித்திரைப் புத்தாண்டு அமைந்திருப்பதனால், வழமை போலவே இம்முறையும் புதுவருடக் கொண்டாட்டம் வெகுவாகக் களைகட்டியிருக்கின்றது.

இந்துக்களின் பண்டிகைகளில் தனித்துவம் கொண்டதாக சித்திரைப் புத்தாண்டு விளங்குகின்றது. தைப்பொங்கல் பண்டிகையானது உழவர்கள் சூரிய பகவானுக்கு நன்றிக்கடன் செலுத்துகின்ற திருநாள். தீபாவளிப் பண்டிகையானது நரகாசுரனை வதம் செய்ததன் நினைவாகக் கொண்டாடப்படுகின்ற திருநாள்.

ஆனால் சித்திரைப் புத்தாண்டுப் பண்டிகை அவ்வாறானதல்ல… இது சூரிய பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டுள்ள திருநாள் ஆகும்.

சமய ரீதியான நம்பிக்கைகளுக்குப் பதிலாக கிரகங்கள், நட்சத்திரங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து புதுவருடத்தைக் கணித்திருக்கின்றார்கள் எமது முன்னோர்.

இப்பண்டிகையின் மற்றொரு விசேடமானது இந்துக்களுக்கும், பௌத்தர்களான சிங்கள மக்களுக்கும் பொதுவான பண்டிகையாகச் சித்திரை வருடப் பிறப்பு அமைந்திருப்பதாகும்.

இரு இனங்களுக்கும் பொதுவாக எவ்வாறு சித்திரைப் புத்தாண்டு பொதுப் பண்டிகையாக அமைந்திருக்கிறது என்பதற்கு இந்து, பௌத்த சமயப் பெரியார்களாலேயோ அல்லது வரலாற்று ஆசிரியர்களாலேயோ இதுவரை ஆதாரங்களுடன் விளக்கங்களைக் கூற முடியவில்லை. ஆனாலும் இந்துக்களினதும் பௌத்தர்களினதும் மூதாதையர்களாக இந்திய தேசமெங்கும் அக்காலத்தில் பரவி வாழ்ந்த மக்கள் வானசாஸ்திரத்தில் சிறந்து விளங்கியதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

இன்றைய காலத்தில் தோன்றுகின்ற சந்திர, சூரிய கிரகணங்களையெல்லாம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட காலப் பகுதியில் எவ்வாறு அவர்களால் துல்லியமாகக் கணித்து வைக்க முடிந்தது என்ற வினாவுக்கு விடை தேட முற்படுவோமானால்  எமது முன்னோர் அன்று பெற்றிருந்த அறிவியல் வளர்ச்சியை எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கையில் இந்துக்களாலும் பௌத்தர்களாலும் கொண்டாடப்படுகின்ற சித்திரைப் புத்தாண்டு எத்தனை காலம் தொன்மை வாய்ந்ததென்பதை இன்னுமே அறுதியிட்டுக் கணிக்க முடியாதிருக்கின்றது.

பண்டைக் காலத்தில் இதனை தமிழ் – சிங்களப் பண்டிகையென்றே அழைத்திருக்கின்றார்கள். இலங்கையில் ஐரோப்பியரின் வருகைக்கு முற்பட்டதான (கி. பி. 500 இற்கு முன்னர்) மன்னராட்சிக் காலப் பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் இராஜதந்திர ரீதியான நட்புறவுகள் நெருக்கமாக இருந்ததற்கான ஒரு அடையாளமாகவும் சித்திரைப் புதுவருடம் திகழ்வதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் சிங்கள மன்னர்கள் தென்னிந்திய ஆட்சியாளர்களுடனான தங்களது உறவைப் பலப்படுத்தும் நோக்கில் தங்களது இளவரசர்களுக்கும் தென்னிந்திய இளவரசிகளுக்கும் திருமண சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். தென்னிந்தியாவில் மூவேந்தர்களுக்கிடையே யுத்தம் மூண்ட வேளைகளில் இங்கிருந்த சிங்கள மன்னர்கள் தமது படைகளை அனுப்பி உதவி புரிந்துள்ளனர். அங்கு உணவுப் பஞ்சம் நிலவிய வேளையில் சிங்கள மன்னர்கள் அரிசி அனுப்பி ஆதரவளித்த தகவல்கள் தென்னிந்திய இலக்கியங்களில் பதியப்பட்டுள்ளன.

இவ்வாறு தொன்றுதொட்டு நிலவிய சிங்கள – தமிழ் நல்லுறவின் அடையாளங்களில் ஒன்றாகவே சித்திரைப் புத்தாண்டும் அமைந்திருக்கின்றது.”  என்று குறிப்பிட்டுள்ளது.

இந்திய மாணவி யோகாசனத்தில் கின்னஸ் சாதனை புரிந்துள்ள செய்தியை சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு வெளியிட்டுள்ளது. அதில், ”பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி வைஷ்ணவி, யோகாசனத்தில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். கோவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இவர் நடராஜசனா யோகா நிலையை நிகழ்த்திக் காட்டினார். பின்னர் செலபாஸ் எனும் மார்புப் பகுதியைத் தரையில் படும்படி உடலை வளைத்து உருண்டபடி சுமார் 13.8  விநாடிகளில் 20 மீட்டர் தூரத்தை அடைந்து சாதனை படைத்தார். மேலும் தாடையைத் தரையில் ஊன்றி 7 நிமிடங்கள் யோகாசனம் செய்தும் அசத்தினார். இதன் மூலம் முந்தைய சாதனையை அவர் தகர்த்துள்ளார். மார்புப் பகுதியை இறுக்கி, பாதத்தைப் பயன்படுத்தி 18.28  வினாடி நேரத்தில் முட்டைகளைக் குடுவையில் வைத்து மற்றொரு கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார் வைஷ்ணவி.” என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It