நாளேடுகள் நவில்வன.

”இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்ற தலைப்பில், பாகிஸ்தானின் எதிர்மறை அணுகுமுறை குறித்து தினத்தந்தி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

”காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பதோ, அரசியல் சட்டத்தின் 370-வது மற்றும் 35ஏ பிரிவுகளை அங்கு ரத்து செய்வதோ முழுக்க, முழுக்க இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. வெளிநாடுகளில் நடக்கும் எந்த உள்நாட்டு விவகாரங்களிலும் இந்தியா தலையிடுவதில்லை. அதுபோலத்தான் மற்ற நாடுகளும் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால் பாகிஸ்தான் மட்டும் காஷ்மீர் பிரச்சினையில் வேண்டாதவகையில் தலையிட்டு கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் ராணுவ தளபதி அவர் வேலையை பார்க்காமல், பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மக்களோடு உறுதியாக நிற்கிறது. கடைசிவரை அவர்கள் போராட்டத்தோடு துணை நிற்போம். அவர்களின் எண்ணங்கள் நிறைவேறும் வகையில் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

இம்ரான்கான் இருமுறை தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார். 7-ந்தேதி நடந்த கூட்டத்திற்குப்பிறகு, இந்தியா காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை தன்னிச்சையாக சட்டவிரோதமாக ரத்து செய்து இருக்கிறது என்று குற்றம் சாட்டியதுடன், இந்திய தூதர் பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும், அதேபோல இந்தியாவில் பாகிஸ்தான் தூதர் இருக்கமாட்டார் என்றும் கூறியிருக்கிறார். இதுமட்டு மல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர வர்த்தகம் ரத்து செய்யப்படுகிறது என்றும் கூறினார். பரஸ்பர வர்த்தகத்தை ரத்து செய்வதால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட போவதில்லை. ஏனெனில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு செய்யப்படும் இறக்குமதியைவிட, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செய்யப்படும் ஏற்றுமதிதான் அதிகமாக இருக்கிறது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It