நாளேடுகள் நவில்வன.

”வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்ட விமானப்படை வீரர்கள்”

என்று தலைப்பிட்டு, சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,

“காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய மீனவர்கள் நால்வரை விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டனர். காஷ்மீரின் ஜம்மு பகுதியில் தாவி நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளத்தில் அங்கிருந்த மீனவர்கள் நால்வர் சிக்கிக்கொண்டனர். இவர்களில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அவர்கள்  இருவரும் ஆற்றின் குறுக்கே இருந்த திட்டின் மீது ஏறி உயிர் தப்பினர். இதைக் கண்ட அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்து மீட்புப்படை வீரர் ஒருவரை இறக்கி், அவர்கள் உடலில் ஹெலிகாப்டரோடு இணைக்கப்பட்டிருந்த கயிறுகளைக் கட்டி இரு மீனவர்களையும்  பாதுகாப்பாக மீட்டனர். விமானப்படை வீரர்களின் துரித நடவடிக்கையால் மீனவர்கள் நால்வரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ஜம்மு பகுதிக்கான விமானப்படை அதிகாரி  சந்தீப் சிங்  தெரிவித்துள்ளார்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா, தனது விண்வெளித் திட்டங்களுக்கு ஃபிரான்ஸுடன் கூட்டுறவை நாடியதை வரவேற்று, தி பயோனியர் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“கடற்பரப்பைக் கண்காணிக்கும் பொருட்டு, இந்தியா, ஃபிரான்ஸுடன் இணைந்து, 8 முதல் 10 செயற்கைக்கோள்களை நட்சத்திரக் கூட்டம் போல் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோதியின் பாரீஸ் பயணத்தின்போது, இறுதி செய்யப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், கடற்பரப்பின் மேலும், கடல் ஆழத்திலும், கடற்கரை ஓரங்களிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். கடந்த பத்தாண்டுகளாக, செயற்கைத் தீவுகளை சீனா நிறுவிவரும் நிலையில், இத்தகைய கண்காணிப்பு அவசியமாகிறது. தவிர, தென்சீனக் கடலின் தீவுகளில் ராணுவக் குவிப்பு மற்றும் ஃபிலிப்பைன்ஸின் ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் ஆர்வம் காட்டுதல் ஆகியவற்றில் சீனா ஈடுபட்டு வருவது, பாதுகாப்பு நிலைமையை சிக்கலாக்கியுள்ளது. பாகிஸ்தானின் ஆதரவுடன் நடைபெறும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஐ.நா. வில் ஆதரவளித்து வரும் ஃபிரான்ஸ், இந்தியாவின் பாதுகாப்பை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த விண்வெளித் திட்டத்தில் இணைவது மிகவும் பொருத்தமானது. மேலும், கடந்த 60 ஆண்டுகளாக, இந்தியாவுடன் விண்வெளித் துறையில் கூட்டுறவு வைத்துள்ள ஃபிரான்ஸ், இந்தியாவின் ககன்யான் என்ற மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திலும் ஈடுபட்டுள்ளது. வருங்காலத்திலும், இந்தியாவின் விண்வெளித் திட்டங்களில் இந்தக் கூட்டுறவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It