நாளேடுகள் நவில்வன.

தமிழகத்தில் மின்சார வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொள்கையை வரவேற்று, தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

”இந்திய பொருளாதாரம் சீரடைய வேண்டுமென்றால், இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் உள்ள வித்தியாசம் வெகுவாக குறையவேண்டும். அப்படி ஒரு நிலைமையை அடைய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்தாலே போதும். இந்த இலக்கை அடைவதற்காக மத்திய அரசு, மின்சார வாகன உற்பத்தியை பெருமளவில் உயர்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தெளிவாக கூறப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களுக்கு தேவையான, ‘லிதியம் பேட்டரிகளை’ இந்தியாவிலேயே தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்சார வாகனங்களுக்கு 12 சதவீத சரக்கு சேவை வரியில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்காக பெறப்பட்டுள்ள கடன்களுக்கு செலுத்தும் வட்டித்தொகையில் ரூ.1½ லட்சம் வருமான வரி வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும், மின்சார வாகன தொழிற்சாலைகள் தொடங்குபவர்களை தமிழ்நாட்டில் தொடங்க ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகன கொள்கையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில் தமிழ்நாட்டில் இந்த தொழிலை தொடங்குபவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்ப்பதையும், 1½ லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் இலக்காகக்கொண்டு இந்த கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், கார்கள், 3 சக்கர வாகனங்கள், பஸ்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு 2022–ம் ஆண்டு இறுதிவரை வழங்கப்படும். ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு செய்து, குறைந்தபட்சம் 50 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு, அங்கு உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவைவரி 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும். இந்த சலுகை 2030–ம் ஆண்டு வரை வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 15 சதவீதம் வரையும், பேட்டரி உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 20 சதவீதம் வரையும் மூலதன மானியம் வழங்கப்படும். இதுபோல, அந்த கொள்கையில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இந்த மின்சார வாகன கொள்கை மிகவும் பாராட்டுக்குரியது. வரவேற்புக்குரியது. தமிழக அரசின் இந்த முயற்சி நிறைய மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடங்கிட வழிவகுக்கும். வேலைவாய்ப்பு பெருகும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா வாழ் இந்தியர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் திரு டிரம்ப் ஆகியோர் சந்திக்கவுள்ள நிகழ்ச்சி குறித்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“இந்திய அமெரிக்க உறவுகளின் முக்கிய கட்டமாக, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஹூஸ்டனில் ஏற்பாடு செய்துள்ள மோடி நலமா? நிகழ்ச்சியில், பிரதமர் மோதி அவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார். டிரம்ப் அவர்கள், மோதி அவர்களுடன் இணைந்து, 50,000 க்கும் மேற்பட்ட இந்தியர்களைடையே உரையாற்றவுள்ளார். இது இந்தியாவின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மேடைகளுக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் முயன்றுவரும் நிலையில், அமெரிக்கா இந்தியாவின் பக்கம் நிற்கிறது என்பது இதன் மூலம் ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்வதன் மூலம், அடுத்த அதிபர் தேர்தலில் அமெரிக்கா வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெற அதிபர் டிரம்ப் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசியலில் கணிசமான அளவில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் உள்ள அமெரிக்கா வாழ் இந்தியர்கள், 62 சதவிகித அளவிற்கு ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக இருக்க, இந்தியாவுடானான மேம்பட்ட உறவுகளை முன்னிறுத்தி, அவர்களது ஆதரவைத் தன்பக்கம் திருப்ப, டிரம்ப் அவர்கள் முயற்சிப்பதாகவும் கருதப்படுகிறது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

Pin It