நாளேடுகள் நவில்வன

மாறிவரும் வேலை வாய்ப்புச் சூழல் குறித்த தெளிவான அலசலைத் தனது தலையங்கத்தில் வெளியிட்டுள்ளது தினமலர். அதில், “நாடு முழுவதும் விஜயதசமி நாள் கொண்டாடப்படும் சமயத்தில், தங்களது வேலையின் சிறப்பை உணர்த்தும் விதமாக நடந்து, சில சம்பிரதாயங்களை பின்பற்றுவது இங்கு வழக்கம். தமிழகத்தில் இதற்கென நடைபெறும் விஜய தசமி விழா, தொழிலை ஆராதிக்கும் விழா. வேலைவாய்ப்பு இதற்கு முக்கியமானது அல்லது சுயதொழில் தேவை… எந்தத் தொழிலானாலும், அதற்குரிய கருவிகளைப் போற்றி வணங்குவது மரபு.இன்றைய சூழ்நிலையில் ஒரு பக்கம் கல்வி வசதிகள் அதிகரித்தாலும், சில தொழில்களுக்கு ஆள் கிடைக்காத அவலங்கள் உள்ளன. ஐ.டி., துறையில் வெறும், ‘டேட்டா அனலைசிங்’ அல்லது ‘நெட்வொர்க்’ பணிகள் என்பதைத் தாண்டி பல முன்னுதாரணங்கள் வந்திருக்கின்றன.தொழில் துறையில் திடீரென கடந்த ஒரு மாதத்தில், 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணிகள் நிரப்பப்படாமல் காத்திருக்கின்றன. கல்லுாரிகளில் படிக்கும் பாடத்திட்டங்களின் அடிப்படையில் தொழில் துறைகளில் பணிகள் இல்லை. காரணம், தொழில்நுட்ப பணிகள், பல்வேறு புதிய தகவல் தொழில் நுட்ப அடிப்படையில் அமைந்திருக்கின்றன. ‘ஆர்டிபீஷியல் இண்டலிஜென்ஸ்’ என்பது, இந்த நுணுக்கங்களில் ஒன்றாக இப்போது பேசப்படுகிறது.வங்கிகளில் கணக்குப்பட்டியல் அல்லது காசாளர் பணி, கணக்கு பரிமாற்றம் என்ற நிலை மாறி, தகவல் தொழில்நுட்பங்களுடன் கூடிய தொகுப்புச் சேவையாக மாறி இருக்கிறது. இம்மாதிரி பணிகளில் வங்கிப் பணிகள் மாறியிருப்பது, டிஜிட்டல் பரிவர்த்தனையின் ஆதிக்க அதிகரிப்பின் அடையாளம்.தவிரவும், ‘சைபர் செக்யூரிட்டி’ என்ற பிரிவு, இப்போது அதிக அளவு முக்கியத்துவம் பெற்று வருகிறது. வெறுமனே தகவல் தொகுப்பு மட்டும் இன்றி, பல்வேறு கோணங்களில் அலசி ஆய்ந்து, அதன் பின்புலத்தைக் கண்டுபிடிக்கும் பணியில், 5,500 பணிகளுக்கு சரியான நபர்கள் கிடைக்கவில்லையாம்.இவற்றை விட சுகாதாரம், மருத்துவ நலம் ஆகிய தொழில், இந்த நாட்டில் மிகவும் பெரிய தொழில், நாள் தோறும் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது, பணக்கார நாடுகளுடைய தொழில்நுட்ப நுணுக்கங்களுடன் கையாளப்படுவதும், அத்துடன், அதற்கு என, செவிலியர் பணிக்கு தகுதியான தொழில்நுட்ப அறிவுள்ளவர்களைத் தேடுகின்றனர்.இவை எல்லாம் அரசு சாராத துறைகளாகும். இதில் முக்கியமான துறைகளில் பணியாற்ற , தகுதி, திறமை இருப்பின், அதற்கேற்ற ஊதியமும் கிடைக்கும் என்பது சாதாரணமான விஷயம். எரிசக்தி துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றில், தகுதி திறன் கொண்டவர்கள் எத்தனை பேர், அடுத்த இரு ஆண்டுகளில் உருவாகப் போகின்றனர் என்பதை, இன்று உத்தேசமாக மதிப்பிட முடியாது. ரயில்வே, தனது நிறுவனத்தின் பல்வேறு பணிகளுக்கு, 1.2 லட்சம் பேரை தேர்வு செய்ய முடிவு செய்து, அதற்கான ஒளிவு மறைவற்ற பணிகளை துவக்கி இருக்கிறது. இந்தப் பணிகளுக்கு இதுவரை, 2.3 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வளவு விண்ணப்பங்களில், 85 சதவீதம் வேலைவாய்ப்பற்றவர்கள் என்றும், வேறு சிலர் மற்ற வேலை பார்த்தாலும், வசதிமிக்க பணி என்பதால், இதை நாடி வருவதாகவும் கூறப்படுகிறது.அதை விட, பெண்கள் எண்ணிக்கை பல்வேறு துறைகளில் கணிசமாக உயர்ந்திருப்பது இந்த செப்டம்பரில் வெளிப்படையாக தெரிகிறது. கல்லுாரிகளில் படித்து பட்டம் பெற்றவர்களா, அல்லது பாதியில் படிப்பைக் கைவிட்டவர்களா என்பதை விட, ‘குறுகிய கால வேலை’ என்றாலும், அதில் ஈடுபட்டு, முன்னேற்றம் காண வேண்டும் என்பது, இளைஞர்களிடையே மாறி வரும்அறிகுறியாகும்.” என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

Pin It