நாளேடுகள் நவில்வன.

தினமணி நாளேடு, ’ஆரம்பமே அபாரம்’ என்று தலைப்பிட்டு, தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில், இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதை வரலாற்றுச் சாதனை என்று தான் கூற வேண்டும். இந்திய வீரர்கள் பலருடைய அபார சாதனை வெளிப்பட்டிருப்பது தான், விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் ஆட்டம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம்.

இந்தியப் பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ரவீந்தர் ஜடேஜா ஆகியோரின் பந்து வீச்சு இந்திய வெற்றிக்கு முக்கியக் காரணம். இத்தனைக்கும், விசாகப்பட்டினம், சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம். அதில் வேகப் பந்து வீச்சாளர்களால் பிரகாசிக்க முடிந்தது என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இரண்டு இன்னிங்ஸிலும் ரோஹித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி, முறையே 176, 127 ரன்களை அடித்தது இந்த டெஸ்ட் ஆட்டத்தின் தனிச் சிறப்பு. இதுவரை, ஒருநாள் ஆட்டத்தில் தமது திறமையை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா, டெஸ்ட் ஆட்டங்களில் ரன்களைக் குவிப்பதில் பின்தங்கியிருந்தார். இந்த முறை இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக அவர் களமிறக்கப்பட்டபோது, மிகப்பெரிய சாதனை படைக்கப் போகிறார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

டெஸ்ட் ஆட்டத்தில் முதலாவது ஆட்டக்காரராக முதல்முறையாகக் களமிறங்கிய எவரும் இதுவரை இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்ததில்லை. இதன் மூலம், டெஸ்ட் ஆட்டத்திலும் தனக்கு ஒரு நிரந்தரமான இடத்தை ரோஹித் ஷர்மா நிலைநிறுத்திக் கொள்ளக் கூடும். சுனில் கவாஸ்கர், சச்சின் டென்டுல்கர், வீரேந்தர் சேவாக், சௌரவ் கங்குலியைத் தொடர்ந்து, இப்போது ரோஹித் ஷர்மாவும் வெற்றிகரமான முதலாவது ஆட்டக்காரர்கள் வரிசையில் இணைகிறார்.

இந்திய அணிக்கு ஆரம்ப ஆட்டக்காரர்களின் குறைபாட்டை முதலாவது டெஸ்ட் அகற்றியிருக்கிறது. ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால் கூட்டணி, இனி வரப்போகும் காலங்களில் நிகழ்த்த இருக்கும் சாதனையை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் பற்றி சீனாவின் நிலைப்பாடு குறித்து, சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,

”பிற நாடுகள் தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது அனைவருக்கும் நல்லது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தைத் தாம் அணுக்கமாகக் கண்காணிப்பதாக சீன அதிபர் ஸி ஜின்பிங், பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கானிடம் தெரிவித்த சில மணி நேரத்தில்  இந்தியா இவ்வாறு கூறியது.

சீனா இந்தியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. 2017-2018 நிதியாண்டில் இரு நாட்டு வர்த்தகத்தின் மதிப்பு 89.71 பில்லியன் டாலரை எட்டியது. ஆயினும், காலங்காலமாக  அந்நாடுகளின் எல்லைப்பகுதியில் நீடித்துவரும் சர்ச்சையால், குறிப்பாக டோக்லாம் வட்டாரத்தில்  ஏற்படும் மோதலால், இந்திய-சீன உறவு பாதிக்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் முக்கிய அங்கம்  என்று  வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்திருக்கிறார். “எங்கள் நிலைப்பாடு சீனாவுக்குத் தெரியும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி கருத்துரைப்பது மற்ற நாடுகளுக்குத் தகாது,” எனறு அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது பல்வேறு அட்டூழியங்கள் நடப்பதாகக் குற்றம் சாட்டும் பாகிஸ்தானுக்கு சீனா குரல் கொடுத்து வருகிறது.  ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து இதனைப் பற்றி பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு அனைத்துலகக் கூட்டங்களில்  உரையாற்றி தனது நாட்டுக்காக ஆதரவு திரட்ட முயல்கிறார். சீனா காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தில் எழுப்பியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ளடங்கும் லடாக்கின் சில பகுதிகள் மீது சீனா உரிமை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

நாளை இந்தியா செல்லும் திரு ஸி, திரு மோடியுடன் மாமல்லபுரத்தில் கலந்துரையாடலில் ஈடுபடுவார்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It