நாளேடுகள் நவில்வன

இன்றைய நாளேடுகள் சீனா – மாலத்தீவுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் வெனிசுவெலாவில் நிலவி வரும் அரசியல், சமூக, பொருளாதாரச் சிக்கல்கள் குறித்தும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்துக்கு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்தும் நவில்கின்றன.

மாலத் தீவுகளுக்கும் சீனாவுக்குமிடையே தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து தி இந்து இதழ் தலையங்கம் தீட்டியுள்ளது. தெற்காசியப் பகுதியிலும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் சீனாவின் முயற்சியே இதில் வெளிப்படுகிறது. பாகிஸ்தானுடன் தடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில் பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. பல உள்கட்டமைப்புத் திட்டங்களில் மாலத் தீவுகளுக்கு உதவிவரும் சீனா, இந்த ஒப்பந்தம் குறித்துக் கடந்த மூன்றாண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இப்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் இவ்வாரம் அரசு முறைப் பயணமாக சீனா செல்லும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவ்வேடு குறிப்பிடுகிறது.

தினமணி நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரையில், வெனிசூலாவில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களும் அதனால் ஏற்பட்டு வரும் பொருளாதார, சமூக சிக்கல்களும் குறித்து திரு எஸ்.இளங்கோ அவர்கள் விவரித்துள்ளார். எண்ணெய் வளம் மிக்க அந்நாட்டில், முதலாளிகள் கொழித்து வந்தது குறித்தும்,பிறகு கிளர்ச்சி மூலம் ஹியூகோ சாவேஸ் அவர்கள் தலைமையில் நல்லாட்சி அமைந்தது குறித்தும்  அது தெளிவாக எடுத்துரைக்கிறது. ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த முழுச் சுதந்தரம் அவருக்கே எதிராகத் திரும்பியதையும் அதற்கு அமெரிக்கா துணை நின்றதையும் குறித்து அது விளக்குகிறது. பல அரசியல் குழப்பங்களுக்கு நடுவில் இன்று தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்தத் தென்னமெரிக்க நாட்டுக்கு அண்டை நாடுகளான அர்ஜெண்டினா, பிரேசில் போன்றவை உதவ முன் வராத நிலையில், உணவுப் பஞ்சம், நீர்த்தட்டுப்பாடு, கல்வியின்மை, வேலையின்மை மட்டுமல்லாமல், குற்றச் செயல்களும் வன்முறையும் தலைவிரித்தாடும் அலங்கோலத்தையும் வெளிப்படுத்துகிறது அக்கட்டுரை.

தினத்தந்தி  ஏடு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் தமிழகத்திற்கு அறிவித்துச் சென்றுள்ள திட்டங்கள் குறித்தும் அவை செயல்படுத்தப்பட்டால், தமிழகத்திற்குக் கிடைக்கக்கூடிய பயன்கள் குறித்தும் தலையங்கம் வரைந்துள்ளது. அதில், “இந்தத்திட்டங்கள் மூலம் நிச்சயமாக நீர்வளம் பெருகும். கடல்வழிப்போக்குவரத்து, சாலைப்போக்குவரத்து மேம்படும். கடல்வழிப்போக்குவரத்து புதிய அத்தியாயத்தை காணும். தென்னக நதிகள் இணைப்பில் ஒரு புதிய முயற்சியை மத்திய மந்திரி அறிவித்திருக்கிறார். ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடும் நீரில் 3 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் ஆண்டுதோறும் கடலில் போய்வீணாக கலக்கிறது. மந்திரி அறிவித்த திட்டப்படி, இந்த நதியிலிருந்து 300 டி.எம்.சி. தண்ணீரை நாகார்ஜூனா சாகர் அணைக்கட்டுக்கு திருப்பிவிட்டு, அங்கிருந்து கிருஷ்ணா நதியில்விட திட்டம் இருக்கிறது. பின்பு அந்த தண்ணீர் சோமசீலா அணைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து காவிரியில் கல்லணைக்கு கொண்டுபோய் சேர்க்கும் திட்டம் இது.

காவிரியில் நிச்சயமாக இந்தத்திட்டத்தின் மூலம் 100 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இந்தத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதற்காக புதிய கால்வாய்களை வெட்டப்போவதில்லை. இரும்பு குழாய்கள் மூலமே தண்ணீரை கொண்டுவருவதற்கான திட்டம் இருக்கிறது. இதனால் நிலம் கையகப்படுத்தவேண்டிய பிரச்சினையே இல்லை. இதுகுறித்து தொழில்நுட்ப ஆய்வுகளை முடித்துவிட்டு, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா முதல்–மந்திரிகளின் கூட்டத்தைக்கூட்டி இந்தத்திட்டம் இறுதிவடிவம் காணும் என்று கூறியிருக்கிறார். இந்த திட்டச்செலவில் 90 சதவீதம் மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். 10 சதவீதத்தைத்தான் இந்த 4 மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தவகையில், மாநில அரசுகளுக்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால், நிதிச்சுமை இருக்காது. 2–வது திட்டமாக சத்தீஸ்கர், மராட்டிய மாநில எல்லையில் உள்ள இந்திராவதி ஆற்றிலிருந்து 300 டி.எம்.சி. தண்ணீரை எடுத்து நாகார்ஜூனா அணைக்கும், அங்கிருந்து சோமசீலா அணைக்கும் கொண்டுவந்து, பின்பு காவிரியில் விடுவதற்கான திட்டம். இந்தத்திட்டம் குறித்து மராட்டியம் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்–மந்திரிகளோடு பேச இருப்பதாக மத்திய மந்திரி கூறியிருக்கிறார். தென்னக நதிகள் குறித்து கவர்னரிடமும், நிதின்கட்காரி பேசி இருக்கிறார். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசாங்கம் விரைவில் செயல்படுத்த இருக்கிறது.

தூத்துக்குடியில் பெரிய கப்பல்கள் வரும்வகையில் 16.5 மீட்டர் அளவுக்கு கடலை ஆழப்படுத்த ரூ.3 ஆயிரம் கோடி செலவில் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதன்மூலம் ஏற்றுமதியாளர்கள் கொழும்பு, சிங்கப்பூர் சென்று தங்கள் பொருட்களை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களுக்கு அனுப்புவதை தவிர்த்து, நேரடியாக தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யலாம். தமிழ்நாட்டின் கனவு திட்டமான கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரத்திற்கும், திருவனந்தபுரத்திற்கும் பயணிகள் படகுப்போக்குவரத்தை தொடங்குவது என்றும், இதை தனியார்வசம் ஒப்படைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் வரை மட்டும் என்றில்லாமல், கன்னியாகுமரியில் இருந்து சென்னைவரை இந்த படகுப்போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். மத்திய மந்திரியை சந்தித்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிற்காக ஏராளமான கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கேட்டு இருக்கிறார். சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்திற்காக ரூ.40 ஆயிரம் கோடி செலவில் பல பெரிய திட்டங்களை அறிவித்த நிதின் கட்காரி, தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு முடித்துவிட்டால், 2 ஆண்டுகளில் அனைத்து திட்டங்களையும் தொடங்கிவிடுவோம் என்று கூறியதையும் தமிழக அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.” என்று எழுதியுள்ளது.

Pin It