நாளேடுகள் நவில்வன.

’நேபாளத்தில் தடம் பதிக்கும் சீனா’ என்ற தலைப்பில் தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

”மாமல்லபுரம் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஜின்பிங் நேபாளம் புறப்பட்டு சென்றார். நேபாளத்தின் ஒருபக்கம் இந்திய எல்லை. மறுபுறம் சீன எல்லை. பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் நேபாள எல்லையில் இருக்கின்றன. பல விஷயங்களில் நேபாளம் இந்தியாவைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால், ஜின்பிங் நேபாளத்துக்கு சென்றபோது நேபாளத்தை தன்கைவசப்படுத்தும் வகையில் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 23 ஆண்டுகளாக நேபாளத்துக்கு சீன அதிபர்கள் யாரும் செல்லாத நிலையில், ஜின்பிங் சென்று மிக நெருங்கிய உறவுக்கு அடித்தளம் போட்டுவிட்டார். நேபாளத்தின் வளர்ச்சிப்பணிக்கு ரூ.3,493 கோடி நிதியுதவி வழங்கும் என்று உறுதி அளித்தார். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத நேபாளத்தில் பல வசதிகள் அளிப்பதற்கு இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.

திபெத்துக்கும், நேபாள தலைநகரான காட்மண்டுக்கும் இடையே 70 கி.மீட்டர் தூரத்துக்கு ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, நேபாளத்தில் போக்குவரத்து, வேளாண்மை, தொழில், வர்த்தகம், பொருட்கள், வினியோகம் தொடர்பாக பல திட்டங்களை தீட்ட சீனா முன்வந்துள்ளது. காட்மண்டையும், சீனா எல்லையையும் இணைப்பதற்காக 28 கி.மீட்டர் சுரங்கப்பாதை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சீனாவையும், நேபாளத்தையும் வர்த்தக ரீதியில் வலுப்படுத்த பாதைகள், விமான நிலையங்கள், ரெயில் வழித்தடங்கள் அமைத்துத்தர சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோல சீனாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே எல்லை மேலாண்மை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நேபாள நாடு பூகோள ரீதியில் மற்ற நாடுகளோடு எளிதில் தொடர்பு இல்லாதது. இந்த நாடு பெரும்பாலும் இந்தியாவையே சார்ந்து இருந்தது. தற்போது போடப்பட்ட 20 ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட்டால், நேபாளத்துக்கும், சீனாவுக்கும் இடையே மிக நெருக்கமான தொடர்பு ஏற்பட்டு, இதன் காரணமாக இந்தியாவின் வர்த்தகமும் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம். இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள நாடு நேபாளம். இப்போது நேபாளத்துக்கும், சீனா எல்லைக்கும் இடையே சாலை வசதி, ரெயில் வசதி போடப்பட்டால், சீன பொருட்கள் நேபாளத்துக்கு எளிதில் செல்லும். உலகில் நட்புக்கு எடுத்துக்காட்டாக, சீனாவும், நேபாளமும் திகழ்கிறது. நேபாளம் வளர்ச்சியையும், வளத்தையும் அடையும்வகையில், இருநாடுகளுக்கிடையே உறவு, நட்பு, கூட்டுறவை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று ஜின்பிங் கூறியிருக்கிறார். ஜின்பிங் தன் நேபாள சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பெய்ஜிங் புறப்பட்டு சென்றவுடன், நேபாள பிரதமர் சர்மாஒலி தன்னுடைய டுவிட்டர் செய்தியில், ‘ஜின்பிங்கின் சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர உறவை ஒரு புதிய உச்சத்துக்கு உயர்த்தியுள்ளது’ என்று குறிப்பிட்டதையும் இந்தியா உற்றுநோக்கவேண்டும்.

நேபாளத்தின் விஷயத்தில் இந்தியா மிக கவனமாக இருக்கவேண்டும். முழுக்க முழுக்க நேபாளம், சீனா பக்கம் போய்விட்டால் நமது பாதுகாப்பிலும் புதிய கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். ஏற்கனவே சீனா, பாகிஸ்தானோடு நெருங்கிய நட்புக்கொண்டிருக்கிறது. இலங்கையில் பெரிய அளவிலான முதலீடுகள் செய்து கால்பதித்துவிட்டது. இப்போது நேபாளத்தையும் தன்பிடியில் வைக்க ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது. எனவே, வெளிவிவகாரக் கொள்கைகளில் இந்தியா மிக கவனமாக இருக்கவேண்டும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கை குறித்து, சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,

”இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிட இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை கடந்த 2017ல் மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை மீதான கருத்துகளை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் கடும் எதிர்ப்புகளை உண்டாக்கியது.

இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை இணையத்தளத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் இந்த வரைவுத் திட்டம் தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு அடுத்த மாதம் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் கூறுகையில், “வரைவுத் திட்டம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. நவம்பர் மாதத்தின் மத்தியில் அமலுக்கு வரும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”

என்று குறிப்பிட்டுள்ளது.
 

Pin It