நாளேடுகள் நவில்வன.

விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி முறைக்குத் தமிழக அரசு சட்டமியற்றியுள்ளது குறித்து, தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“விளைபொருட்களின் விலையை விவசாயிகளால் நிர்ணயிக்க முடியாத நிலையில், கிடைத்த விலைக்கு விற்றுவிடும் நிர்ப்பந்தம் ஏற்படுவதால் தொடர்ந்து நஷ்டத்திலேயே விவசாயத்தை நடத்த முடியாத சூழ்நிலையில், விவசாயம் தேவையா? என்ற உணர்வு இப்போது விவசாயிகளிடையே வந்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும் ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு உரிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) என்ற சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, இப்போது ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது. அகில இந்தியாவிலேயே ஒப்பந்த சாகுபடிக்கு என வேறு எங்கும் இதுபோல சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதன்படி, கொள்முதல் செய்பவர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் விவசாயிகள் அல்லது உழவு உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைபொருட்கள் அல்லது கால்நடை அல்லது அதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விளைச்சலுக்குப்பிறகு அல்ல, விதைப்பு காலத்துக்கு முன்பே என்ன விலைக்கு ஒப்பந்தம் செய்கிறார்களோ, அந்த விலையையே அறுவடைக்குப்பிறகு பெறமுடியும் என்ற வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகமாக இருந்தால் விலை இல்லை என்ற குறை இவ்வாறு முதலிலேயே ஒப்பந்தம் செய்யும்போது நிச்சயமாக இருக்காது என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 94 சதவீத விவசாயிகள் குறு மற்றும் சிறு விவசாயிகள்தான். அவர்களுக்கு இந்த சட்டம் நிச்சயமாக பலன் அளிக்கும். இந்த சட்டத்தின்கீழ் இதை நிறைவேற்றுவதற்கான விதிகள் வகுக்கப்பட இருக்கிறது. விதிகளை வகுக்கும்நேரத்தில், விவசாயிகளை கலந்து ஆலோசித்து அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் உள்ளடக்கி இருக்கவேண்டும். அந்த விதிகளை எல்லாம் வகுத்து விவசாயிகளுக்கு தெரிவித்த பிறகுதான் இந்த சட்டம் அமலுக்கு வரும். இந்த சட்டத்தின்கீழ் உற்பத்தியாளர்களோடு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும் என்பது கட்டாயமல்ல. விருப்பப்படும் விவசாயிகள் மட்டும் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்பதுதான் அரசின் திட்டம்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்படவுள்ளது குறித்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்படுவதை, யாத்திரீகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, பிரிவினைவாதிகளின் பதாகைகள் அடங்கிய வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. தனது சதிகாரத் திட்டத்தை முன்னெடுக்க, பாகிஸ்தான் கர்த்தார்பூர் வழித்தடத்தைப் பயன்படுத்தக் கூடும். கடந்த ஓராண்டாக, கர்தார்பூர் வழித்தடத் திட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அதிக ஆர்வம் காட்டியது, இந்தியப் பாதுகாப்பு அமைப்புக்கு எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. கர்த்தார்பூர் வழித்தடத் திட்டம், பொதுமக்களின் உணர்வு பூர்வமான விஷயம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியா இந்த வழித்தடத்தை கடந்த 20 ஆண்டுகளாகக் கோரி வந்துள்ளது. இதனைத் தவறாகப் பயன்படுத்தி, தங்கள் சதித்திட்டங்களை நிறைவேற்ற பாகிஸ்தான் முனையக் கூடும். இந்தியாவுடன் நல்லுறவை பாகிஸ்தான் விரும்பும் பட்சத்தில், கர்தார்பூர் வழித்தடம் அமைதிக்கான வழித்தடமாக மாறுவதற்கு வாய்ப்பு பெருகும். ஆனால், தனது சதித்திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ அமைப்பும் இறங்கினால், அதனை முறியடிக்க இந்தியா உறுதியுடன் நிற்கும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It