நாளேடுகள் நவில்வன.

இலங்கையில் 7-வது அதிபராக, கோத்தபய ராஜபக்சே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து, தினத்தந்தி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

”இலங்கையில் 7-வது அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பரவலாக எதிர்பார்த்ததுபோல, முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே 52.25 சதவீத வாக்குகளை பெற்று மகத்தான வெற்றியை அடைந்து பதவி ஏற்றுள்ளார்.

35 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டாலும், முக்கியமாக 2 பேரின் பெயர்தான் வேட்பாளர்கள் பட்டியலில் பிரபலமாக இருந்தது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் கடைசி தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார மந்திரியுமான சஜித் பிரேமதாசா போட்டியிட்டார். இதில், கோத்தபய ராஜபக்சே 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் வீழ்த்திய நேரத்தில் ராணுவ செயலாளராக இருந்தார். அந்த நேரத்தில்தான் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது.

இப்போது கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருப்பதால், இந்தியா-இலங்கை உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதவேண்டிய நேரம் இந்தியாவுக்கு வந்துவிட்டது. வெற்றி பெற்றவுடன் கோத்தபய ராஜபக்சேவும், “எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், எனக்கு எதிராக ஓட்டு போட்டவர்களுக்கும், எந்த மதம், எந்த இனம் என்று பார்க்காமல், எல்லோருக்கும் நான்தான் ஜனாதிபதி” என்று பெருந்தன்மையோடு கூறியதுபோல, இலங்கை தமிழர்கள் உள்பட எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாமல் பணியாற்றவேண்டும். சீனா என் நண்பர் என்ற எண்ணம் கோத்தபய ராஜபக்சேவுக்கு இருந்தாலும், இந்தியா அண்டை வீட்டுக்காரர், சொந்தக்காரர் என்ற உணர்வு எப்போதும் இலங்கைக்கு இருக்கவேண்டும். கோத்தபய ராஜபக்சே, தமிழ் மக்களுக்கு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றித்தரவேண்டும். அதற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவை 250 ஆவது அமர்வில் நுழைந்துள்ளதை வரவேற்று, தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

நாடாளுமன்ற மாநிலங்களவை 250 ஆவது அமர்வில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியாவின் ஜனநாயக மாண்புகளையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பேணுவதில் மாநிலங்களவை சீரிய பங்களிப்பாற்றியுள்ளது. எனினும், பலசமயங்களில் அதன் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றத்தை நிறுவ இந்திய அரசியலமைப்பு கருத்தில் கொண்டபோது, அதற்குத் தகுந்த காரணங்களையும் தெளிவாக சிந்தித்தது.

மக்களவை பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது. எண்ணிக்கை அடிப்படையில் செயலாக்கத்தில் ஆளுமை கொண்ட அவை. மேலவையிடம் இல்லாத நிதியதிகாரமும் மக்களவையில் உண்டு. இத்தகைய வேறுபட்ட அதிகாரங்கள் கொண்டிருந்த போதிலும், மாநிலங்களவை தனித்துவமான பங்களிப்பாற்றுகிறது. மாநிலங்களவையில், பலதரப்பட்ட அரசியல்  மற்றும் தொழில்நுட்பப் பின்னணி கொண்ட உறுப்பினர்கள் உள்ளதால், மக்களவை இயற்றும் சட்டங்கள் குறித்து,  முதிர்ந்த அறிவுடன் கூடிய விஸ்தாரமான விவாதங்கள் நடைபெற ஏதுவாகிறது. தவிர, தனிப்பட்ட பிராந்தியங்களிலுள்ள மாநிலங்களின் பிரதிநிதிகளாக விளங்கும் உறுப்பினர்கள், இந்தியாவின் ஆழமான ஒருமைப்பாட்டிற்கு மெருகூட்டும் வண்ணம் செயல்பட இயலும். நிறுவப்பட்ட நாள் முதல் இப்பணியை மாநிலங்களவை செவ்வனே செய்து வந்துள்ளது. அதன் பெருமைமிக்க பாரம்பரியம் போற்றப்பட வேண்டும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It