நாளேடுகள் நவில்வன.

பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதை வரவேற்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் தூக்கி நிறுத்த, பல சீர்திருத்தங்களை அரசு முன்னெடுத்து வருவது வரவேற்கத்தக்கது. அவ்வகையில், கடந்த புதனன்று, ஐந்து பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள அரசு பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள அரசு பங்குகளை விற்பதன் மூலம், நடப்பாண்டில், 1.05 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தின் 53.29 சதவிகித அரசுப் பங்குகளை விற்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், அந்நிறுவனத்தின் மேலாண்மை கட்டுப்பாடு, தனியார் கைகளுக்கு மாறும். நிதி ஆயோக், மேலும் 50 பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு, அவற்றின் அரசு பங்குகளை விற்கப் பரிந்துரைத்துள்ளது. இந்த நடவடிக்கையால், முதலீட்டுகான சூழல் வெகுவாக முன்னேறும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் ராஜபக்ச சகோதரர்களின் கைக்கு, ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து, தி ஹிந்து தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், அரசு அதிகாரத்தில் ராஜபக்ச குடும்பத்தின் பிடி இறுகியுள்ளது. அவரது சகோதரர், அதிபர் தேர்தலில் உறுதியான வெற்றி கண்டு ஆட்சியைக் கைப்பற்றியபின், இந்த மாற்றம் எதிர்பார்க்கப்பட்டது தான். பிரதமர் பதவியைப் பறி கொடுத்த ரனில் விக்ரமசிங்கேயின் கட்சியைச் சார்ந்த அதிபர் வேட்பாளர், தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, அவர் பிர்தமர் பதவியை ராஜினாமா செய்தார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், புதிய பிரதமரை நியமிக்க இது வகை செய்தது.

இலங்கை அரசியலமைப்பின் கீழ், அதிபர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சரவைக்குத் தலைமை வகிப்பார். ஆனால் அவரால் நியமிக்கப்படும் பிரதமர், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இலங்கை பொதுஜன பெராமுனா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தற்போது பெரும்பான்மையில்லை. அது, மஹிந்த ராஜபக்சவுக்குப் பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அவரது பதவி இடைக்கால ஏற்பாடாக இருக்கும். 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின்படி, நாடாளுமன்றம் முடிவுக்கு வரும்வேளையில், 6 மாதங்கள் முன்னதாக அதனை அதிபர் கலைக்கலாம். அதன்படி பார்க்கப் போனால், அடுத்த மார்ச் மாதத்திற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும்  நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். மஹிந்த ராஜபக்ச, மிகவும் பிரபலமான தலைவராகத் தற்போது உருவெடுத்துள்ளார். அதிபரின் வெற்றிக்குப் பின்னால் அவரது பங்களிப்பை யாரும் மறுப்பதற்கில்லை. ஆட்சியில் அவர் இடம் பெற்றிருப்பது, அதிபர் எவ்வாறு நாட்டை நடத்திச் செல்வார் என்பதைத் தீர்மானிக்கும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It