நாளேடுகள் நவில்வன.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் வணிகத் தலைநகரான இந்தூா், புதியதொரு முன்னுதாரணம் படைத்திருப்பது குறித்து, தினமணி நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

”இந்தூா் மாவட்ட ஆட்சியா் லோகேஷ் ஜாதவும், மாநகராட்சி ஆணையா் ஆஷிஷ் சிங்கும் சோ்ந்து எடுத்திருக்கும் ஒரு முடிவுக்கு அத்தனை ஊழியா்களும் ஒத்துழைப்பு நல்க முன்வந்திருக்கிறார்கள். எல்லா வெள்ளிக்கிழமைகளிலும், மாவட்ட நிர்வாகத்தின்கீழ் உள்ள அலுவலா்களும் மாநகராட்சி அலுவலா்களும் அலுவலகங்களுக்கு பொதுப் போக்குவரத்தைத்தான் பயன்படுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரும் மாநகர ஆணையரும்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைப்பது என்பது இந்த முயற்சிக்கு முக்கியமான காரணம். அதுமட்டுமல்லாமல், மகிழுந்து, இரு சக்கர மோட்டார் வாகனங்கள் போன்றவை வாங்க முடியாதவா்கள்தான் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவா்கள் என்கிற மாயையை உடைப்பதும்கூட, இந்த முடிவுக்கு இன்னொரு காரணம். தாங்களே முன்வந்து பொதுப் போக்குவரத்தில் பயணித்த மாவட்ட ஆட்சியரும், மாநகர ஆணையரும், தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்றி வாரத்தில் ஒரு நாள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

எதிர்பார்த்ததைவிட மக்கள் மத்தியில் இருந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்தத் திட்டம். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தூா் மாநகர போக்குவரத்துத் துறை, வெள்ளிக்கிழமைகளில் கூடுதலான பேருந்துகளை இயக்க முற்பட்டிருக்கிறது. பேருந்துகள் மட்டுமல்ல, வாடகை மகிழுந்துகளும், வாடகை மூன்று சக்கர வாகனங்களும்கூட இந்த முயற்சிக்கு துணை நிற்க முன்வந்திருப்பது மக்கள் மன்றம் நல்லதொரு முயற்சியை எந்த அளவுக்கு வரவேற்று ஆதரிக்கும் என்பதைக் காட்டுகிறது.

ஆரம்பத்தில் வாரத்தில் ஒரு நாள் என்று தொடங்கும் இந்த முயற்சி, காலப்போக்கில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதை அனைவரும் வழக்கமாக்கிக் கொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்லும். அதற்கு பொதுப் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

ஈரானில் நிலவும் நகர்ப்புற பதற்றநிலை குறித்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவிற்குப் பதற்றமான சூழலை ஈரான் எதிர்கொண்டுள்ளது. அந்நாட்டின் உள்துறை அமைச்சர், ஈரானின் 31 பிராந்தியங்களில், 29 இல் பதற்ற நிலை உள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். மஷார் மற்றும் ஷிராஸ் பிராந்தியங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் நூற்றுக் கணக்கானோர் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர். உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டதைக் காரணமாகக் கொண்டு போராட்டங்கள் வெடித்ததாக மேலெழுத்துவாரியாகத் தோன்றினாலும், பொருளாதார மந்த நிலை காரணமாக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதையும், அதனைச் சரிக்கட்ட அரசு இந்த விலை உயர்வை மேற்கொண்டது என்பதையும் கவனிக்க வேண்டும். ஈரானின் பொருளாதாரம், 9.5 சதம் சுருங்கியுள்ளதாக சர்வதேச நாணைய நிதியம் தெரிவித்துள்ளது. ஈரானில் அடிக்கடி போராட்டங்கள் வெடிப்பதற்கு, சுதந்திரம் வேண்டி நடுத்தர மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்காக என்பதைத் தாண்டி, வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் களத்தில் இறங்கிப் போராடும் நிலையை எட்டியுள்ளது. இஸ்லாம் புரட்சிக்கு இத்தகைய இளைஞர்கள் அடித்தளமாக இருந்ததை மறக்க இயலாது. ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை, அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணமாக இருந்த போதிலும், உள்நாட்டுக் கொள்கைகளும் பாதகமாக உள்ளன. எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தைத் தாண்டி விரிவுபடுத்த ஈரான் தவறிவிட்டது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

Pin It