நாளேடுகள் நவில்வன.

ஈரானில் வெடித்துள்ள போராட்டங்கள் குறித்து, தினமணி நாளிதழ் தலையங்கம்  வெளியிட்டுள்ளது. அதில்,

“ஹாங்காங், சிலி, லெபனான், அண்டை நாடான இராக் ஆகியவற்றைத் தொடா்ந்து இப்போது ஈரானும் மக்கள் எழுச்சியைத் தாங்க முடியாமல் தவிக்கிறது. ஈரானில் இரண்டு வாரங்களாக மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே பொருளாதாரம் தள்ளாட்டத்தில் இருக்கும் நிலையில், மக்களின் ஆத்திரத்தை எதிர்கொள்ள முடியாமல் ஈரானிய அரசு திணறுகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் காணாத அளவிலான போராட்டங்களை ஈரான் இப்போது எதிர்கொள்கிறது. ஈரானிலுள்ள 30 மாநிலங்களில் 28 மாநிலங்கள் கடுமையான போராட்டத்தின் பிடியில் இருப்பதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார். மஷா், ஷிராஸ் நகரங்களில் பாதுகாப்புப் படையினரால் போராட்டக்காரா்களைக் கட்டுப்படுத்த முடியாமல் நூற்றுக்கணக்கானவா்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறர்கள். அதன் விளைவாக போராட்டம் மேலும் வலுத்திருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை.

சுதந்திரம் கேட்டு நடுத்தரவா்க்க மாணவா்கள் ஈரானில் அடிக்கடி போராட்டத்தில் இறங்குவதுண்டு. அதுபோன்ற போராட்டமல்ல, இப்போது நடைபெறுவது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக்கு உறுதுணையாக இருந்த கீழ் மத்திய தர வகுப்பு இளைஞா்கள்தான் இப்போது போராட்டத்தில் முன்னிலை வகிக்கிறார்கள். இந்தப் போராட்டத்தை வழிநடத்துபவா்கள் வேலையில்லா இளைஞா்கள்.

40 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானியா்கள் எந்த கமேனி ஆட்சியை வரவேற்றார்களோ, அதே கமேனிக்கு எதிராக இப்போது மக்கள் தெருவில் இறங்கிப் போராட முற்பட்டிருக்கிறார்கள்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

சீனா தற்போது பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவது குறித்து, தி ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கை தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“சீனா கடந்த ஒருவார காலமாக, பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. சீனா எதிர்பாராத வகையில், ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்கான கோரிக்கையை முன்னிறுத்தி நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு ஆதரவாக, அமெரிக்கா தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது, இது போதாதென்று, ஹாங்காங் உள்ளாட்சித் தேர்தலில், ஜனநாயக ஆதரவு கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன. உய்கூரில், குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட, முஸ்லீம்கள் உள்ளிட்ட உய்கூர் மக்கள், மனிதாபிமானமற்ற வகையில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று கசிந்த தகவலின் அடிப்படை ஆவணங்கள் அச்சிடப்பட்டது, சீனாவுக்கு மேலும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. வர்த்தகப் போரில் சீனா ஏற்கனவே இறங்கியுள்ள நிலையில், சீனாவின் பொருளாதாரம், கடந்த 27 ஆண்டுகள் காணாத அளவுக்கு சரிந்துள்ளது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It