நாளேடுகள் நவில்வன.

உலக வர்த்தக அமைப்பின் தகாராறுத் தீர்வு ஆணையம் குறித்த தலையங்கத்தை தி எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

“உலக வர்த்தக அமைப்பின் தகாராறுத் தீர்வு ஆணையத்திற்கு புதிய நியமனங்கள் செய்வதை அமெரிக்கா தடுத்துள்ளதால், அந்த ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்த நிலைக்குத் தள்ளப்படும். ஏற்கனவே, உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் சர்வதேச வர்த்தகம், இதனால் மேலும் பாதிக்கப்பட்டக் கூடும். இதனை சரிக்கட்டும் வகையில், பிராந்திய மற்றும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொள்வது உசிதம்.

உலக வர்த்தக அமைப்பின் தகாராறுத் தீர்வு ஆணையத்திற்கு ஏழு நீதிபதிகள் அவசியம். உலக வர்த்தக விதிகள் மீறல் போன்ற வழக்குகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட இந்த ஆணையத்தில் தற்போது மூன்று நீதிபதிகளே உள்ள நிலையில், மேலும் இரு நீதிபதிகள் இம்மாதம் ஓய்வு பெறவுள்ளனர். ஒரு நீதிபதியைக் கொண்டு இவ்வாணையம் செயல்பட முடியாது. இந்த ஆணையத்திற்கு நீதிபதிகள் நியமனம் குறித்து அமெரிக்கா மீண்டும் பரிசீலித்தாலே ஒழிய, அது செயல்பாட்டுக்கு வருவது இயலாத காரியம். அமெரிக்காவோ இது குறித்து மீண்டும் பரிசீலிக்க வாய்ப்பில்லை. எனவே, மாற்று வழிகளாக. வரிகள் குறித்து சரியான முடிவுகளை எடுத்து, அதிகரிக்கும் வர்த்தகத்தையும், வெளிப்படைத் தன்மையையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

உலகம் வெப்பமயமாகி வருவது குறித்து, தி ஏஷியன் ஏஜ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“உலக வானிலை ஆய்வு மையம், உலக வெப்பம், தொழிற் புரட்சிக்கு முந்தைய காலத்தில் நிலவிய சராசரி வெப்ப நிலையைவிட, 1.1 சதம் அதிகமாகியுள்ளது என்றும், 2019 ஆம் ஆண்டு, அதிக வெப்பம் பதிவு செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளில் ஒன்று எனவும் அறிவித்துள்ளது. அதிக வெப்பத்தை கடல் உறிஞ்சி விடும் என்று எதிர்பார்த்து வருகையில், கடல் அதிக அமிலத்தன்மை பெற்றுள்ளது, அதனால் கடல்சார் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பத்தாண்டுக்குப் பிறகும், உலக வெப்பம் 0.1 முதல் 0.2 சதம் அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், தொழிற் புரட்சிக்கு முந்தைய காலத்தில் நிலவிய சராசரி வெப்ப நிலையைவிட, 1.5 சதம் அதிகம் என்ற அபாயகரமான நிலை விரைவில் எட்டப்படும். இத்தகைய வெப்பமயமாக்கலைத் தடுக்கத் தேவையான நிதியும், தொழில்நுட்பமும் கைவசம் இருந்தும், இதனை செயல்படுத்தத் தேவையான உறுதி இல்லை என்று ஐ.நா.பொதுச் செயலர் குட்டரெஸ் அவர்கள் கூறியுள்ளார். இதற்கு எடுத்துக்காட்டாக, 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதை அவர் சுட்டிக்க்காட்டினார். வெப்பமயமாதலைத் தடுக்க, கழிவுகளைக் குறைப்பதில் இந்தியா பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டுள்ளது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It