நாளேடுகள் நவில்வன.

இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, தினமணி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

”இந்தியாவின் பாதுகாப்பும்கூட மிகப் பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. வடமேற்கு, வடகிழக்கு எல்லைப் பகுதிகள் அரசின் கவனத்தில் முன்னுரிமை பெற்றிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் கடலோரப் பகுதிகளும்கூட அதே முனைப்புடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

சென்ற வாரத்தில் இந்தியக் கடல் எல்லைக்குள் சீனாவின் வேவு பார்க்கும் கப்பல் ஒன்று நுழைந்தது. அதை இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல்கள் விரட்டி அடித்தன. இந்த நிகழ்வு எந்த அளவுக்கு நாம் நமது கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்பதை உணா்த்துகிறது.

சில ஆண்டுகளாகவே, இந்துமாக் கடல் பகுதியில் சீனா தொடா்ந்து தன்னுடைய நடமாட்டத்தை  அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீன போர்க் கப்பல்களின் நடமாட்டம் அண்மைக்காலமாக இந்துமாக் கடலில் அதிகரித்திருப்பது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளேகூட கவலைப்படத் தொடங்கியிருக்கின்றன எனும்போது, இந்தியா எந்த அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்தியம்பத் தேவையில்லை.”

என்று குறிப்பிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றியமைக்காதது குறித்து, தி ஹிந்து தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“கடந்த பிப்ரவரி முதல் நடப்பாண்டில் ஐந்து முறையாகத் தொடர்ந்து வட்டி விகிதத்தைக் குறைத்த ரிசர்வ் வங்கி, டிசம்பர் மாதக் கொள்கை அறிவிப்பை வியாழனன்று வெளியிட்டபோது, அதில் வட்டிக்குறைப்பை அறிவிக்கவில்லை. ரிசர்வ் வங்கி அறிவிக்கும் நிதிக் கொள்கையின் தாக்கங்கள், பொருளாதாரத்தில் தென்படுவதற்குக் கால அவகாசம் தேவைப்படும். இதுவரை அறிவிக்கப்பட்ட 135 அடிப்படைப் புள்ளிகள், பொருளாதாரத்தில் ஊடுருவ வேண்டும் அதன் பின்னர், அவற்றால் உண்டாகிய தாக்கங்கள் ஆராயப்பட வேண்டும். வருங்காலத்தில், பொருளாதார ஊக்குவிப்பை கவனத்தில் கொண்டு, வட்டிக் குறைப்பு செய்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு அறிவித்தது, சந்தைக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It