நாளேடுகள் நவில்வன

இன்றைய நாளேடுகளில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் அவசியம் குறித்தும் மூன்றாம் பாலினத்தவர் குறித்த மசோதா எதிர்வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஒக்கி புயல் பாதித்த மீனவர்களைத் தேடும் பணி குறித்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு தனது தலையங்கத்தில், பெருகி வரும் சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் உயரும் எர்பொருள் விலையையும் கருத்தில் கொண்டு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின்  பயன்பாடு பெருகவேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது. அது குறித்த ஆய்வுகள், தொழில்நுட்பம் ஆகியவை ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் இதை எளிமைப்படுத்தும் வகையில் உயர் திறன் பாட்டரிகளின் உற்பத்தியும் பரிசீலிக்கப்படவேண்டும் என்றும் அவ்விதழ் கூறுகிறது.

தி இந்து நாளிதழ் தனது தலையங்கத்தில்,  மூன்றாம் பாலினத்தவர் குறித்த மசோதா குறித்து கருத்து வெளியிட்டுள்ளது. அதில்,
டிசம்பர் 15-ல் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2014-ல் தேசிய சட்டப் பணிகள் ஆணையம் தொடுத்த வழக்கில் மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலும் பாதுகாக்கும் வகையிலும் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் மூன்றாம் பாலினத்தவருக்கும் உண்டு என்று உறுதிசெய்தது அந்தத் தீர்ப்பு. அவர்கள் சுயமாக முடிவெடுக்கவும், தங்களது கருத்துகளை வெளியிடவும் சமூக வாழ்க்கையில் பங்கெடுக்கவும் முழு உரிமை உண்டு என்றும் கூறியது.

2014-ல் மூன்றாம் பாலினத்தவர் உரிமைகளுக்கான தனிநபர் சட்ட முன்வரைவு ஒன்றை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து மத்திய அரசே மக்களவையில் தனது சட்ட முன்வரைவை அறிமுகப்படுத்தி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அதை அனுப்பிவைத்தது. அதைப் பரிசீலித்த நிலைக்குழு, 2017 ஜூலையில் அளித்த அறிக்கையில் சட்ட முன்வரைவில் சில திருத்தங்களையும் சேர்க்கைகளையும் பரிந்துரைசெய்திருந்தது. சமூக நல்லெண்ணத்தில் உருவாக்கப்படும் சட்டங்கள் இரக்கம் காட்டினால் மட்டும் போதாது. விளிம்பு நிலையில் உள்ளவர்களும் மற்றவர்களைப் போல சுதந்திரத்தையும் மதிப்பையும் அனுபவிக்கச் செய்ய வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்ட முன்வரைவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிலைக்குழுவின் அறிக்கையிலும் 2014-ல் நிபுணர் குழு அளித்த அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்ட கருத்துகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளது

தினத்தந்தி தனது தலையங்கத்தில் மீனவர்களை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவரிக்கிறது. அதில், “ தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்கள் இருந்தாலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற ஒருசில மாவட்ட மீனவர்களுக்குத்தான் இலங்கை கடற்படையால் பிரச்சினை ஏற்படுகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு இந்த பிரச்சினைகள் கிடையாது. ஏனெனில், அவர்கள் ஒரேநாளில் கடலுக்குச்சென்று பாக்ஜலசந்தியில் மீன்பிடித்து திரும்புவதில்லை. ஆயிரம் கடல்மைல் தூரத்துக்குமேல் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். ஏறத்தாழ 50 நாட்கள்வரை இவர்கள் கடலுக்குள் இருப்பது வழக்கம். கடந்த மாதம் 29, 30–ந்தேதி வீசிய ‘ஒகி’ புயலால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் சென்றிருந்தார்கள். இப்போது அவர்களில் பலர் திரும்பிவிட்டாலும், இன்னும் 472 பேர் கரைக்கு திரும்பவில்லை என்று அரசு கூறுகிறது. அந்த மீனவர்களெல்லாம் ஆள்இல்லாத தீவுகளில் ஒதுங்கியிருக்கலாம். மொராக்கா, மாலத்தீவு போன்ற பகுதிகளில்கூட ஒதுங்கியிருக்கலாம் என்று மீனவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். எனவே கடலோரக் காவல்படைக் கப்பல்களும், நமது ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் ஆயிரம் கடல்மைல் தூரம்வரை சென்று அங்கும், ஆள்இல்லாத தீவுகளிலும் தேடவேண்டும்.

பல மீனவர்கள் 25–ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்பு வந்தால் போதும் என்ற உணர்வுடன் இன்னமும் தொலைதூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருப்பார்கள் என்று அவர்கள் குடும்பத்தினர் நம்புகிறார்கள். அவர்களை உடனே கரைக்குத் திரும்ப வேண்டுகோள் விடுக்கும் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் சர்ச்சில் அடிகளார் பேச்சை, கடற்படை ஒலி நாடாவில் பதிவு செய்து அதைக் கடற்படைக் கப்பல்களிலிருந்தும், ஹெலிகாப்டர்களிலிருந்தும் வயர்லெஸ் மூலம் ஒலிபரப்பு செய்ய எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ” என்று விளக்குகிறது.

 

 

 

 

Pin It