நாளேடுகள் நவில்வன.

பெண்கள் பாதுகாப்புக்காக, தமிழகக் காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி குறித்து, தினத்தந்தி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

”மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ள நிர்பயா நிதியில் இருந்து மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்புக்காக வகுக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப் படுகிறது. அந்த வகையில் தமிழக அரசுக்காக 19 ஆயிரத்து 68 கோடியே 36 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 600 கோடி ரூபாய் தமிழக அரசு பயன்படுத்தியதாக பயன்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்காக அனுமதிக்கப்பட்ட முழுத்தொகையையும் பெறவும், அதற்குரிய பல திட்டங்களை வகுத்து, அதற்கான முழுத்தொகையையும் செலவழிக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், தமிழக காவல்துறையில் இப்போது பெண்கள் கையில் வைத்திருக்கும் செல்போன் மூலமாகவே ஆபத்து நேரங்களில் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கும், அவர்களது பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என்ற வரிசையில் மூவருக்கும் தகவல் கொடுக்க ‘காவலன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக ‘காவலன்’ செயலியை அனைத்து பெண்களும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்தால் அவர்கள் செல்போனே ஆபத்து நேரங்களில் பாதுகாப்பு ஆயுதமாக மாறும். இந்த செயலியை அனைத்து ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் பதிவிறக்கம் செய்ய முடியும். ஏதாவது ஆபத்து நேரங்களில் காவல்துறையின் அவசர உதவிக்கு அவசர நேரத்துக்கான எஸ்.ஓ.எஸ். பட்டனை ஒருமுறை தொட்டால் போதும் இல்லையெனில் 3 முறை உதறினால் போதும். ஒரே நேரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அபாய மணியும், மற்ற 3 எண்களுக்கு அவசர செய்தியும் சொல்லும். இதை பயன் படுத்தும் பெண்ணின் இருப்பிட தகவல்கள் மற்றும் அந்த இடத்தின் வரைபடம் போலீசார் உள்பட 4 எண்களுக்கும் தானாகவே பகிரப்படும். இதுமட்டுமல்லாமல், இந்த அவசரகால பட்டனை தொட்டவுடன் செல்போனில் உள்ள கேமரா தானாகவே 15 வினாடிகள் வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பிவிடும். அலை தொடர்பு இல்லாத இடங்களிலும் இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்பும் வசதி உள்ளது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

’தேசப்பற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டு மகாகவி பாரதியார்: பிரதமர் மோடி புகழாரம்’ என்று தலைப்பிட்டு, சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,

“மகாகவி பாரதியார் நீதி, சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாகவி பாரதியாரின் 138ஆவது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையடுத்து பாரதியாரை நினைவு கூரும் விதமாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்வதாக அந்தப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் எழுச்சியூட்டும் விதமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று ஒருமுறை சொன்னார் மகாகவி பாரதியார். மனிதனின் அவதியைப் போக்கி அதிகாரம் அளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது,” என்றும் பிரதமர் மோடி தமது பதிவில் தெரிவித்துள்ளார்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Pin It