நாளேடுகள் நவில்வன.

திவால் சட்டத்தை வலுப்படுத்த அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்று, தி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“திவாலான நிறுவனங்களை வாங்குவோர் மீது, அவர்கள் வாங்குவதற்கு முன்னால் திவாலான நிறுவனங்கள் இழைத்த குற்றங்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், திவால் சட்டத்தைத் திருத்த அரசு முற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால். தீர்வைக்கான வழிமுறைகள் துரிதப்படுத்தப்படுவதோடு, திவாலான நிறுவனங்களை வாங்குவோருக்கு, நம்பிக்கை அளிக்கக் கூடிய எளிய வழிமுறைகள் கிடைக்கவும் வழி பிறக்கும். திவாலான நிறுவனங்கள் இழைத்த குற்றங்களுக்கு எதிராக, கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதிலிருந்து, அந்நிறுவனங்களை வாங்வோருக்குப் பாதுகாப்பு அளிப்பதன் மூலம், அந்த நிறுவனங்களின் சொத்துக்களை விற்கவும், அவற்றுக்கான நல்ல விலை பெற்று, நிறுவனக் கடங்களை அதிக அளவில் அடைக்கவும் ஏதுவாகும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

லாகூரிலுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான நீதிமன்றத்தில், ஹஃபீஸ் சயீத் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுள்ளது குறித்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச கண்காணிப்புக் குழுவான நிதி நடவடிக்கைப் பணிக் குழு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடுமையாக செயல்படாவிட்டால், அந்நாட்டின்மீது நடவடிக்கைகள் மேலும் எடுக்கப்படும் என அக்குழு விடுத்த அச்சுறுத்தல் ஆகியவற்றின் நேரடி விளைவாகவே, லாகூரிலுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான நீதிமன்றத்தில், ஹஃபீஸ் சயீத் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுள்ளது. நிதி நடவடிக்கைப் பணிக் குழுவின் சாம்பல் பட்டியலில் தற்போதுள்ள பாகிஸ்தான், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி வழங்கப்படுவதைத் தடுக்கத் தவறினால், அக்குழுவின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் உள்ளது. எனவேதான், ஹஃபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கும் பாகிஸ்தான், தற்போது நடவடிக்கை எடுப்பதுபோல் காட்டிக் கொள்கிறது. பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திக் கொள்கிறது. ஹஃபீஸ் சயீத் மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டதோ, ஐ.நா.வினால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதோ, பாகிஸ்தானுக்கு ஹஃபீஸ் சயீத் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போதுமான காரணங்களாகத் தோன்றவில்லை. மாறாக, பாகிஸ்தானில் கடந்த நாடாளுமன்றத்தில் களத்தில் இறங்கவும் ஹஃபீஸ் சயீத் ஊக்குவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. நிதி நடவடிக்கைப் பணிக் குழு தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன், ஹஃபீஸ் சயீத் மீது பாகிஸ்தான், அதிகபட்சமாக, அவ்வப்போது வீட்டுக் காவலில் வைத்துப் பின்னர் விடுவித்த கதைதான் தொடர்ந்தது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It