நாளேடுகள் நவில்வன.

இணைய வர்த்தகம் குறித்த தலையங்கத்தை தினமணி வெளியிட்டுள்ளது. அதில்,

“இந்தியப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டிருக்கிறது இணைய வர்த்தகம். மின்னணுப் பொருள்களில் தொடங்கி, ஆயத்த ஆடைகள், மருந்துகள், புத்தகங்கள், அழகு சாதனப் பொருள்கள், காலணிகள், பொம்மைகள், அன்றாட பலசரக்குப் பொருள்கள் வரை இப்போது இணையத்தின்  மூலம் பெறப்படுகின்றன. கிராமங்களில்கூட ரயில் பயண முன்பதிவும், திரையரங்க நுழைவுச் சீட்டும் இணைய வழியில் பெறும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

செல்லிடப்பேசி மூலமான இணைய சேவை வந்ததுமுதல், செயலிகள் மூலம் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துமே நடைபெறும் நிலைமை ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை.

2017-இல் 390 கோடி டாலராக (சுமார் ரூ.27,800 கோடி) இருந்த இணைய வர்த்தகத்தின் அளவு, 2026-க்குள் 2,000 கோடி டாலராக (சுமார் ரூ.1.42 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையதள வசதியும், செல்லிடப்பேசியும்தான் இந்த வளர்ச்சிக்குக் காரணங்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதைவிட உண்மை தொழில்நுட்பப் பயன்பாட்டில் இன்றைய இந்தியத் தலைமுறையினர் மேலைநாடுகளுக்கு நிகராக மாறியிருக்கிறார்கள் என்பது.

இணைய வர்த்தகக் கொள்கையின் மாதிரி வரைவை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதில் இலச்சினை உரிமையாளர்களுக்கும், இணைய வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்குமான தெளிவான வழிமுறைகள் தரப்பட்டிருக்கின்றன. முதல் முறையாக, போலி தயாரிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள், அரசால் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

பெரும்பாலான திருட்டு வணிக நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து இயங்குவதால், இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் அவற்றைக் கொண்டுவருவது அசாத்தியம். முற்றிலுமாகத் தடுக்க முடியாவிட்டாலும், இணைய வர்த்தகத்தை முறைப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு முனைந்திருப்பதை வரவேற்றாக வேண்டும்!”

என்று குறிப்பிட்டுள்ளது.

ஹஃபீஸ் சயீதுக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறித்து, தி ஏஷியன் ஏஜ் பத்திரிக்கை தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

”பாரீஸிலிருந்து செயல்படும் பயங்கரவாத நிதித் தடுப்பு நடவடிக்கைக் குழுவிற்கு பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தற்போது தலைமை வகித்து வருவதால், கடந்த அக்டோபர் மாதம், பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்காமல், பழுப்புப் பட்டியலில் சேர்க்கும் சலுகை அளிக்கப்பட்டது. இதன் மூலம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி மற்றும் பண மோசடி ஆகியவற்றை முறியடிக்க பாகிஸ்தான் மேலும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட நான்கு மாத கால அவகாசம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், ஹஃபீஸ் சயீதுக்கும் கூட்டாளிகளுக்கும் 11 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத் தண்டனை எந்த அளவிற்கு உண்மையிலேயே நிறைவேற்றப்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

Pin It