நாளேடுகள் நவில்வன.

ஒரு நாள் அளவிலான  “மக்கள் சுய ஊரடங்கு’ வெற்றிகரமாக நிறைவேறியதைப் பாராட்டி, தினமணி தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில்,

“ஒரு தேசம் சாதனைகளில் ஒன்றுபட்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை. சோதனைகளில் துவளாமல் ஒருங்கிணைந்து போராடத் தயாராக இருக்கும்போதுதான், அதன் வலிமை வெளிப்படுகிறது. ஒரு நாள் அளவிலான நேற்றைய “மக்கள் சுய ஊரடங்கு’, இந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் அறைகூவலை ஏற்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருநாள் முழுக்கத் தனது இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி வைத்ததும், மாலை சரியாக ஐந்து மணிக்கு விண்ணையே வியக்க வைக்கும் அளவில் பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரர் அனைவரும் ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து கரகோஷம் செய்து, “கரோனா வைரஸ்’ நோய்த்தொற்றுக்கு எதிரான மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருப்போரை நன்றியுடன் நினைவுகூர்ந்த தருணம், இந்திய வரலாற்றின் உன்னதத் தருணங்
களில் ஒன்று.

ஒருநாள் அடையாள சுய ஊரடங்கு என்பதன் பின்னணியில் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சவாலை எதிர்கொள்வோம் என்கிற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவது முக்கியமான காரணம் என்றால், இந்த நோய்த்தொற்று குறித்த புரிதலை, செய்தியை இந்தியாவின் கடைக்கோடிக் குடிமகன் வரை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதைத்தான் ஒருநாள் “மக்கள் சுய ஊரடங்கு’ முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது. இந்தியாவின் குக்கிராமங்கள் வரை “கரோனா வைரஸ்’ என்கிற நோய்த்தொற்று அதிவிரைவாகப் பரவிவருவது குறித்தும், அவற்றுக்கு சிகிச்சை பெறுவதைவிட, முன்னெச்சரிக்கையாகத் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதும் இப்போது எடுத்துச் சொல்லப்பட்டு விட்டது. “

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It