நாளேடுகள் நவில்வன.

இன்றைய நாளேடு, ஆன்மீகச் சுற்றுலாவுக்கு இந்தியாவும் நேபாளமும் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து விமரிசித்துள்ளது. தமிழ் நாளிதழ், ரயில் பயணத்தில் மருத்துவ சிகிச்சை குறித்து, ரயில்வே நிர்வாகத்தைப் பாராட்டியுள்ளது.

தி ஸ்டேட்ஸ்மன் நாளிதழ், தனது தலையங்கத்தில், தொடர்புகள் மற்றும் ராஜீய உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும், ஆன்மீகப் பிணைப்பு அதிக நெருக்கத்தை உருவாக்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. எனவே, அண்மையில் நேபாளத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோதி பயணித்தபோது, இருநாடுகளுக்குமிடையிலான ஆன்மீகச் சுற்றுலாவுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டது என அப்பத்திரிக்கை கூறுகிறது. இதற்கு முத்தாய்ப்பாக, பிரதமர் திரு நரேந்திர மோதியும், நேபாளப் பிரதமர் திரு கேபி ஷர்மா ஓலியும் இணைந்து, நேபாளத்திலுள்ள சீதா தேவியின் பிறப்பிடமான ஜனக்பூருக்கும், இந்தியாவில் ராமபிரான் பிறந்த அயோத்திக்கும் இடையில் பேருந்து சேவையைக் கொடியசைத்துத் திறந்து வைத்தனர் என்று அப்பத்திரிக்கை கூறுகிறது. இதன் மூலம், இருநாடுகளுக்குமிடையிலான ஆன்மீகச் சுற்றுலா மேம்படும் என்றும் அப்பத்திரிக்கை குறிப்பிடுகிறது.

ரெயில் பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சை என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ள தினத்தந்தி தமிழ் நாளிதழ்,

”மக்களுக்கு போக்குவரத்து என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. இதில், ரெயில்வே மிகமுக்கிய பங்காற்றுகிறது. இந்தியா முழுவதும் 12 ஆயிரத்து 617 ரெயில்கள் தினமும் ஏறத்தாழ 2 கோடியே 20 லட்சம் பயணிகளை ஏற்றிக்கொண்டு, 7 ஆயிரத்து 216 ரெயில் நிலையங்கள் வழியாக சென்றுகொண்டிருக்கின்றன. ரெயில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்துகொண்டிருந்தாலும், பயணத்தின்போது பயணிகளில் யாருக்காவது திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுகின்ற நேரத்தில் என்ன செய்வதென்று அவர்களும், அவர்களுடன் வரும் சக பயணிகளும் திக்குமுக்காடி போய்விடுகிறார்கள். விமானத்தில் ஏதாவது ஒரு பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் யாராவது டாக்டர்கள் பயணம் செய்கிறார்களா என்று ஒலிபெருக்கியில் கேட்டு ஏற்பாடு செய்வார்கள். பயணியின் உடல்நிலை மிகமோசமாக இருந்தால் அருகிலுள்ள விமானநிலையத்தில் இறக்கி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார்கள்.

 

ஆனால் ரெயில்களை பொறுத்தமட்டில், பல பெட்டிகள் இருப்பதால் ஏதாவது ஒரு பெட்டியில் டாக்டர்கள் பயணம் செய்கிறார்களா? என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். அதிலும் மாரடைப்பு போன்ற உடனடியாக சிகிச்சை தேவைப்படும் பயணிகளுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால், பலநேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலைமைகளை தவிர்க்க, தற்போது ரெயிலில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகர்கள் மருத்துவ உதவி தேவைப்படும் பயணிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை அவர்களுக்கு பொறுப்பு கடமையாக சுமத்தப்பட்டுள்ளது. யாராவது பயணிக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் குறிப்பாக மூச்சுத்திணறல், மாரடைப்பு போன்ற அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் டிக்கெட் பரிசோதகர்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது அடுத்த ரெயில்நிலைய ஸ்டே‌ஷன் மாஸ்டருக்கோ தகவல் தெரிவிக்கவேண்டும். ஒவ்வொரு ஸ்டே‌ஷன் மாஸ்டர்களும் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளோடு தொடர்புகொண்டு உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இதுதவிர, எல்லா எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முதலுதவிபெட்டி இருக்கவேண்டும். டிக்கெட் பரிசோதகர்களுக்கும் முதலுதவி அளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 138 என்ற ஹெல்ப் லைனிலும் பயணிகள் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் நிச்சயமாக வரவேற்கக்கூடியது. ஆனால், பல பயணிகளுக்கு இந்த வசதிகள் இருப்பதெல்லாம் தெரியாது என்பதால், ரெயில் பெட்டிகளிலும் இதை குறிப்பிடவேண்டும். முடிந்தால் ரெயில் டிக்கெட்களிலும் இந்த ஏற்பாடுகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு ரெயிலிலும் பயணம் செய்பவர்களில் டாக்டர்கள் யார்–யார், அவர்கள் எந்த பெட்டியில் பயணம் செய்கிறார்கள் என்ற விவரங்களை பதிவு விவரங்களில் இருந்து திரட்டி அனைத்து டிக்கெட் பரிசோதகர்களுக்கும் தெரிவித்தால் அவசர சிகிச்சைக்கு அவர்கள் உதவியையும் பெற வசதியாக இருக்கும். இதுபோல, எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் யாராவது பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அது வழக்கமாக நிற்கும் அடுத்த ரெயில் நிலையம்வரை காத்திருக்காமல், இடையில் மருத்துவ வசதி உள்ள ஊர்களில் ரெயிலை நிறுத்தி பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யவேண்டும்.”

 

என்று கூறியுள்ளது.

 

Pin It