நாளேடுகள் நவில்வன.

இன்றைய நாளேடுகள், ஜிஎஸ்டி தகவல் குறிப்புக்கள் அலசப்பட்டு, வரி வசூல் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும், பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்திற்கு தடையுத்தரவு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதை வரவேற்றும், 1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை குறித்த 186 வழக்குகளை மீண்டும் புலன்விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை வரவேற்றும், 2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்தும் தலையங்கம் தீட்டியுள்ளன.

தி எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், ஏப்ரல் – டிசம்பர், 2017 காலகட்டத்தில், சென்ற ஆண்டைவிட 18.2 சதம் நேரடி வரி வசூல் அதிகரித்திருப்பதை வரவேற்றுள்ளது. இருப்பினும், ஜிஎஸ்டி தகவல் குறிப்புக்கள் அலசப்பட்டு, வரி வசூல் அதிகரிக்கப்பட வேண்டுமென்றும் அப்பத்திரிக்கை கூறுகிறது.

ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ் நாளிதழ், ’தணிக்கையாளர்களுக்குத் தணிக்கை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில், சத்யம் ஊழல் வெளியான பின்னர், அமெரிக்காவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், அந்நிறுவனத்திற்கும், பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்திற்கும் அபராதத் தொகை விதிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளது. எனினும், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் விழித்துக் கொண்டு, சேபி அமைப்பு, பிரைஸ் வாட்டர்ஹவுஸ் தணிக்கை நிறுவனத்திற்கு 27 கோடி ரூபாய் அபராதத் தொகையும், இரண்டாண்டுகள் தணிக்கை செய்வதைத் தடை செய்தும் உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், 1984 ஆம் ஆண்டு சீக்கியர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை குறித்த 186 வழக்குகளை மீண்டும் புலன்விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம், மூவர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து வெளியிட்ட உத்தரவை வரவேற்றுள்ளது. இது, முன்னதாக, இவ்வழக்குகள் சரிவர விசாரிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்கிறது என்று அப்பத்திரிக்கை கூறுகிறது. தவறிழைத்தவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை என்பது குறித்தும், நீதியை நிலைநாட்ட நிர்வாகம் முற்படாததற்கு யார் காரணம் என்பதும் அறியப்பட வேண்டும் என்று அப்பத்திரிக்கை கூறுகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த தனது தலையங்கத்தில், தினமலர் நாளிதழ், கூறியுள்ளதாவது:

“மத்திய அரசின், 2018ம் ஆண்டு பட்ஜெட், புரட்சிகளை கொண்டிருக்குமா என்ற கேள்வி அதிகமாக எழுந்திருக்கிறது. ‘புரட்சி, கவர்ச்சி’ என்ற வார்த்தைகள் எப்போதும், இம்மாதிரி காலங்களில் பேசப்படுவது வழக்கமாகி இருக்கிறது. மூன்றாண்டுகளில், பிரதமர் மோடி, அரசியலில் வெற்றிகளை தொடர்ந்து பெற்று வருபவர். ஆனால், மொத்த வளர்ச்சி, 6.5 சதவீதம் என்பதும், அதன் சதவீத அளவு குறைவதும், இப்போது நிச்சயம் என்பது, எல்லார் மனதிலும் குடிகொண்டிருக்கும் விஷயம். பிப்., 1ம் தேதி, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், தாக்கல் செய்யப்படும் பொருளாதார சர்வே, இத்தடவை சில தகவல்களைத் தரலாம்.
ஏனெனில், நிதியமைச்சர் அருண்ஜெட்லி, இதுவரை, ஜி.எஸ்.டி., அமலாக்கம் உட்பட பல விஷயங்களை கையாண்ட விதம் சிறப்பானது. எந்தெந்த பிரச்னைகளில், அதிக விவாதம் வருகிறதோ, அதற்கு, ஒருமித்த கருத்து அடிப்படையில் தீர்வு காணும் அனுபவம் கொண்டிருக்கிறார். ஏனெனில், ஜி.எஸ்.டி., கூட முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கருத்து என்றாலும், அதை அமலாக்குவதில் உள்ள சிரமங்களை கையாண்டு முடிவு செய்ததை பாராட்டாவிட்டாலும், மற்ற கட்சிகள் ஏற்க வேண்டும். ஏனெனில், இந்த ஜி.எஸ்.டி., வருகை, வரிவிதிப்பில் பல குளறுபடிகளை குறைக்கும். ஆனால், பல்வேறு தொழில்கள் கொண்ட மிகப் பிரமாண்டமான நாடு இது. அடுத்தடுத்த குறைகள் ஏதாவது எழும் போது, அவை ஒவ்வொன்றிற்கும் விடை காண முயற்சிப்பதை விட, பொறுமை காத்து வரிவிதிப்புகளை ஒழுங்குபடுத்தியாக வேண்டிய கட்டாயம், நிதியமைச்சகத்திற்கு உள்ளது.
அதிலும், நேரடி வரிவிதிப்பில் எவ்வாறு முடிவுகளை எடுக்கப் போகிறார் ஜெட்லி… அதன் மூலம் வளர்ச்சிக்கு வழிகாண்பதுடன், அரசின் நிதிப் பற்றாக்குறை சீராக இருந்தாக வேண்டும். ஏனெனில், முந்தைய நிதியமைச்சர்கள் போல, சேவை வரி, கலால் வரி ஆகியவற்றை அவர் கையாள முடியாது. வராக்கடன் விஷயத்தை வங்கிகள் சிறப்பாக கையாண்ட போதும். இன்னமும் ஒவ்வொரு வங்கியும், தன் கணக்கில், ‘வேண்டுமென்றே கடனை கட்ட மறுக்கும் பிரபுக்கள்’ பட்டியலால் சிரமப்படுகிறது. இதை ஒழுங்குபடுத்துவது, ஒரு நாளில் நடக்கக் கூடியது அல்ல. தற்போது, சில சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தைக் குறைத்த அரசு, இனியும் அதை மேலும் குறைப்பது சரியாக இருக்காது. ஓய்வூதிய பணிக்கொடை குறித்த சில முக்கிய சட்டங்கள், தொழிலாளர் நலச்சட்டங்களில் சில மாற்றங்கள், சிறு, குறு தொழில்களில் உற்பத்தியாகும் பொருட்களை எளிதாக உள்ளூர் சந்தையில் விற்க நடைமுறை என்ற, பல்வேறு விஷயங்களை மத்திய அரசு கையாளும் விதத்தை, இந்த பட்ஜெட் பிரதிபலிக்க வேண்டும்.
அரசுப் பணியாளர்கள், ஊழலின்றி வேலை பார்க்கும் திறன் அதிகரிப்பு, அத்துடன் அவர்களுடைய பணிப்பாதுகாப்பு, மேலும் திறன் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கான உரிய வழிகளையும், இந்த பட்ஜெட் காட்டியாக வேண்டும்.எல்லாவற்றையும் விட, வரும் மாதங்களில், கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பில்லை. அதற்கு ஏற்ப, நமது கச்சா எண்ணெய்க்கு செலவழிக்கப்படும் அன்னியச் செலாவணி அளவு அதிகரிக்காமல் இருப்பதையும் கவனித்தாக வேண்டும். சாலைகள் அமைத்தல், போக்குவரத்து வசதி மேம்பாடு, வீடுகட்ட சுலப கடன், ரயில்வே துறை அதிகமான முனைப்புடன் செயல்பட அதிக நிதி ஒதுக்கீடு ஆகியவை, காலக்கெடுவுடன் கூடிய வளர்ச்சியைத் தரும்; அது, அதிக வேலைவாய்ப்பைத் தரும். அப்போது மொத்த வளர்ச்சி – ஜி.டி.பி., அதிகரிக்கும். உலகச் சந்தை நிலவரமும் சாதகமாக இருக்கும் சூழ்நிலை உள்ளது. விவசாய வளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்பதன் அடையாளமாக, பருப்பு, சர்க்கரை மற்றும் கோதுமை உற்பத்தி விஷயங்களில், அரசு அக்கறை காட்டியிருக்கிறது உண்மை. முந்தைய, ‘பசுமைப்புரட்சி’ உணவுப் பஞ்சத்தை தவிர்க்க உதவினாலும், அது இடைக்கால ஏற்பாடு என்ற கருத்தை, நிபுணர்கள் கூறுகின்றனர். பால் மாடுகள் வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்கள், வட கிழக்கு, பீஹார், ம,பி., போன்ற மாநிலங்களில் அதிக உணவு தானிய விளைச்சலுக்கு ஏற்பாடு ஆகியவை, இந்தியாவின் உணவுத் தேவைக்கு ஈடுகொடுக்கும்.
விவசாய உற்பத்தி மீது வரி விதிப்பது சிரமம் என்பது, அனைவரும் அறிந்ததே. அதே சமயம், பால் உற்பத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவை, எளிய வரிவிதிப்பில் வரும் பட்சத்தில், அரசுக்கும் வருமானம் கிடைக்கும். ஆகவே, கவர்ச்சி என்பதை விட, திட்டங்களை அமல்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைய வேண்டும்.”

Pin It