நாளேடுகள் நவில்வன

இன்றைய நாளேடுகளில் இந்திய வம்சாவளிப் பெண், தென்னாப்பிரிக்காவில் தேசியக் குற்ற விசாரணை அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செய்தியும் நாட்டின் வேளாண், பொருளாதாரச் சவால்கள் குறித்த அலசலும் இடம் பெற்றுள்ளன.

தினமணி நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி ஒன்றில், தென்னாப்பிரிக்க நாட்டின் தேசியக் குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளிப் பெண்மணி பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அதில், “தென்னாப்பிரிக்க நாட்டின் தேசிய குற்ற விசாரணை அமைப்பின்  முதல் பெண் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷமிலா படோஹி நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட நீதிமன்றத்தில் உதவி வழக்குரைஞராகத் தனது பணியைத் தொடங்கிய படோஹி, 1995 ஆம் அண்டு அப்போதைய அதிபர் நெல்சன் மண்டேலா அமைத்த விசாரணைக் குழுவில் பணியாற்றினார். அதன் பின்னர், சிறப்பு விசாரணைக்குழுவின் பிராந்தியத் தலைவராகப் பணியாற்றினார். நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களுக்குச் சட்ட ஆலோசகராகக் கடந்த  9 ஆண்டுகளாக படோஹி பணியாற்றி வந்த நிலையில், தற்போது தென்னாப்பிரிக்க நாட்டின் தேசியக் குற்ற விசாரணை அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.”

தினமலர் நாளிதழ் தற்போது நிலவி வரும் வேளாண், பொருளாதாரச் சவால்கள் குறித்துத் தனது தலையங்கத்தில் அலசியுள்ளது. அதில், “நிலத்தடி நீர் பாதிப்பு, இயற்கைப் பேரிடர்கள், இலவச மின்சாரம் தந்தும், அதனால் விளைவிக்கும் செலவு குறையாத போக்கு, விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காத பரிதாபம் என்று, பல அம்சங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.முந்தைய பிரதமர் ராஜிவ் காலத்தில் இருந்து தொடரும், விவசாயிகளுக்கு நிவாரண உதவி அதிகரித்து கொண்டே போகிறது. ஆனால், விவசாயத்துறை சீர்திருத்தம் என்பது, வந்தாலொழிய பிரச்னை தீர வாய்ப்பு இல்லை என்ற கருத்து எழுந்திருக்கிறது.தமிழகத்திலும் டெல்டா விவசாயிகள், நெல் விளைவிக்கும் அளவை இத்தடவை குறைத்துள்ளனர். அதிலும், ‘கஜா’ புயல் அவர்களை மேலும் சிதைத்துவிட்டது. அப்படிப்பார்க்கும் போது, விவசாயத்தை வளமாக்க புதிய அணுகுமுறை, அந்தந்த சூழ்நிலைகளை மையமாக்கி உருவாக்க வேண்டும். அதில் சந்தைப்படுத்துதலும், முக்கியத்துவம் பெறுகிறது.இவற்றுடன், சில முக்கிய தொழில்கள் உற்பத்தியும் அதிகரிக்காததற்கு காரணம், உலகப் பொருளாதார பாதிப்புகளுடன் அவை இணைந்திருக்கிறது. இதற்கு மாற்று வழியாக, ஒவ்வொரு நாட்டுடன், தனித்தனியே பொருளாதார உறவுகளைப் பேணுவதுடன், பொதுவான அணுகுமுறையும் தேவையாகிறது.நல்ல வேளையாக, கச்சா எண்ணெய் விலை எகிறாதபடி, நம் தேவைக்கு ஏற்ப சவுதி தர முன்வந்திருப்பது நல்ல அம்சம். இதை, பிரதமரிடம் அவர் உறுதியளித்தது, நடைமுறையாக வேண்டும். தவிரவும், மத்திய கிழக்கில் உள்ள சிறிய நாடான குவெட்டார், அதிக அளவு எண்ணெய் வளம் கொண்டது. அந்த நாடு, சவுதியின் ஆளுமை கொண்ட, ‘ஒபெக்’ என்ற எண்ணெய் வள கூட்டமைப்பு நாடுகளுடைய தொடர்பில் இருந்து விலகி, தனியாக உலகத் தேவைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முன்வந்தது, நமக்கு சாதகமான செய்தி.நேரடி வரி விதிப்பில் அதிக நிதி, வரிகட்டும் எண்ணிக்கை அதிகரிப்பு, அரசு திட்டங்களில் ஊழல் குறைப்பு இவை, மத்திய அரசு நிதி நெருக்கடியில் சிக்காதிருக்க வழிவகுக்கலாம். ஆனால், இவை எல்லாம் யுகங்களில் முடிவு காண்பதல்ல” என்று குறிப்பிட்டுள்ளது.

 

Pin It