நாளேடுகள் நவில்வன.

இன்றைய தமிழ் நாளேடு, ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு திட்டம் குறித்து தலையங்கம் எழுதியுள்ளது. அதில்,

‘மக்களுக்கு அதிகம் பயன்படும், மருத்துவ காப்பீட்டு திட்டமான, ‘ஆயுஷ்மான்’ துவக்கப்பட்டிருக்கிறது. ‘அனைவருடன் இணைந்து அனைவருக்காக’ என்ற இத்திட்டம், கிராமப்புற ஏழைகள், நகர்ப்புற வசதியற்றவர்கள் பயன்பெறுவது அதிகரிக்கும் என்பதால், மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாகும்.தமிழகத்தில், முதல்வர் மருத்துவ காப்பீடு, இத்திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டதால், ஏற்கனவே இதில் உள்ள, 1.57 கோடி பேருக்கு, ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் காப்பீடு கிடைக்கும். அதனால், இதயநோய், சிறுநீரக நோய்கள் மற்றும் மூளை நரம்பியல் நோய் சிகிச்சைச் செலவு, வறிய குடும்பங்களை அழிக்காது.பிரதமர் அறிவித்த இத்திட்டத்தை, ஒடிசா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள் ஏற்கவில்லை. இத்திட்டப்படி, இதன் பயனாளிகளுக்கு, அடையாள அட்டை மற்றும் இதில் பயன்பெற தகவல்கள் பெற வசதி செய்யப்படும். நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்கள், பெரிய நகரங்களில் உள்ள, 13 ஆயிரத்து 500 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.’

என்று குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயகத்தின் வெற்றி என்ற தலைப்பில் தி ஸ்டேட்ஸ்மன் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.  அதில், மாலத் தீவுகளில் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகள், அந்நாட்டில் ஜனநாயகம் வெற்றியடைந்ததைப் பறைசாற்றுகின்றன என்று கூறியுள்ளது. வன்முறைகளற்ற, பொறுப்பான ஜனநாயக நெறிமுறைகளின்படி, மாலத்தீவுகளில் அரசு மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று கூறும் அப்பத்திரிக்கை, சீனாவின் அதரவுடன் சர்வாதிகாரமாகச் செயல்பட்டு வந்த அதிபர் அப்துல்லா யாமீன் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டு, அமைதியான முறையில் ஆட்சி கை மாறுவதற்கு வகை செய்வதாகக் கூறியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்த கூட்டணி எதிர்க் கட்சி வேட்பாளர் இப்ராஹிம் முகம்மது சோலி, பிரபலமான நபராக இல்லாவிட்டலும் மக்கள் அவரை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டு அவருக்கு குறிப்பிடத்தக்க சிறந்த வெற்றியை அளித்துள்ளனர் என்று அப்பத்திரிக்கை கூறுகிறது.

 

 

Pin It