நாளேடுகள் நவில்வன.

ரஷ்யாவில் இன்று துவங்கும் 2018 ஆம் ஆண்டுக்கான உலகக் கால்பந்து போட்டிகள் பற்றி இன்றைய நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

தி ஏஷியன் ஏஜ் பத்திரிக்கை, உலகின் மிகச்சிறந்த விளையாட்டுக் கேளிக்கை நிகழ்ச்சி இன்று ரஷ்யாவில் துவங்குகிறது என்று, 2018 ஆம் ஆண்டுக்கான உலகக் கால்பந்து போட்டிகள் பற்றித்  தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள், ரசிகர்களின் அடாவடிச் செய்கைகள் ஆகியவற்றைத் தக்கவாறு எதிர்கொள்ள ரஷ்யா அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என அப்பத்திரிக்கை கூறுகிறது.

லட்சக்கணக்கில் குவியும் உலக ரசிகர்களிடையே, ரஷ்யாவின் பாரம்பரியச் சிறப்புக்களை எடுத்துரைக்க அரிய வாய்ப்பு அந்நாட்டுக்குக் கிடைத்துள்ளது என அப்பத்திரிக்கை கூறுகிறது போட்டியில் பங்கேற்கும் அணிகளின் கோப்பையை வெல்லும் வாய்ப்புக்கள் பற்றிக் குறிப்பிடுகையில், சென்ற உலகக் கோப்பையைக் கைப்பற்றிய ஜெர்மன் அணியில் துவக்கநிலையில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் முழுத்திறமை வெளிப்படுத்த முடியாதது சற்று பின்னடைவு என்றும், பிரேஸில் அணிக்கு வெற்றி தேடித் தருவார் என நட்சத்திர வீரர் நெய்மாரின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்றும், அர்ஜெண்டினாவின் அணியைச் சார்ந்த உலகப் புகழ்பெற்ற வீரர் மெஸ்ஸி இதுவரை தனது பெருமையை நிலைநாட்டவில்லை என்றும், ஸ்பெயின், ஃபிரான்ஸ், குரோவேஷியா மற்றும் உருகுவே அணிகளும் பிரகாசிக்கலாம் என்றும் அப்பத்திரிக்கை கூறுகிறது.

அமெரிக்க, வடகொரிய அதிபர்கள் சந்திப்பு பற்றி, தமிழ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

”சந்தித்ததே வெற்றி” என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில்,

”யாருமே எதிர்பாராத ஒன்று நடந்திருக்கிறது. மூன்று நாள் முன்பு வரையிலும்கூட இந்தச் சந்திப்பு நிகழுமா நிகழாதா என்பது குறித்து சர்வதேச அளவில் சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. அனைவருடைய ஐயப்பாடுகளையும் பொய்யாக்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்திருப்பது நிஜமான வரலாற்றுத் திருப்பு முனை.

வடகொரியாவின் அணுஆயுதக் குறைப்புக்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவதாக அதிபர் கிம் அவர்களும், வடகொரியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதாக அதிபர் டிரம்பும் தெரிவித்திருக்கிறார்கள். ஒப்பந்தத்தில் எந்தவிதக் காலக் கெடுவும் குறிப்பிடப்படவில்லை. வடகொரியாவின் ஒரே ஒரு நட்பு நாடான சீனாவைக் குறித்து எதுவும் பேசப்படவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையே, ராஜாங்க ரீதியிலான உறவு ஏற்படுத்தப்படுவது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. இந்த நிலையில், அதிபர் டிரம்பும், அதிபர் கிம்மும் கைகுலுக்கி ஆரத்தழுவி நட்புறவு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தான் குறிப்பிடத்தக்க செய்தியாகும். அடுத்தகட்டமாக, அதிபர் கிம் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்படலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளலாம். அதன்பிறகுதான் சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமாதான ஒப்பந்தம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செப்ல்லப்படுமா என்பதைத் தீர்மானிக்க முடியும். சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. சமாதானக் கொடி பறக்க விடப்பட்டிருக்கிறது என்பது வரை வெற்றி.”

எனக் குறிப்பிட்டுள்ளது.

 

 

Pin It