நாளேடுகள் நவில்வன.

தமிழகத்தில் இவ்வாண்டு நடக்க இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில்,

”கடந்த 2015–ம் ஆண்டின்போது ஜெயலலிதாவின் முயற்சியால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ஏறத்தாழ 5 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் 62 திட்டங்கள் செயலாக்கத்துக்கு வந்துள்ளன. ரூ.62,738 கோடி தமிழ்நாட்டுக்கு முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் 96 ஆயிரத்து 341 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் மரணம் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த மாநாடு நடப்பது தள்ளிப்போடப்பட்டு, இப்போது 2019–ல் நடக்கிறது. இப்போது நடக்கும் மாநாட்டில் ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். 250 நிறுவனங்களுக்குமேல் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், முதல் மாநாட்டைவிட கூடுதலாக முதலீடுகளை ஈர்க்கவும், 200 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய நிறுவனங்களைத் தொடங்குவதற்காக சிப்காட் நிறுவனம் 1,500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தயாராக வைத்திருக்கிறது.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 24–ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டிலான 13 நிறுவனங்கள் தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மீண்டும் கடந்த 3–ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டில் 14 தொழிற்சாலைகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆக, இனி புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தயாராக இருக்கிறது. இவ்வாறான புதிய வேலைவாய்ப்புகளில் 50 சதவீத பணியிடங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே ஒதுக்க வேண்டும் என்ற குரல் சட்டசபையில் எதிரொலித்தது.”

என்று குறிப்பிட்டுள்ளது.

சீன அதிபரின் அழைப்பின் பேரில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சீனா பயணித்தது குறித்து ஹிந்து நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அவரது இப்பயணம் இரு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது என்று குறிப்பிட்டுள்ள அப்பத்திரிக்கை, கொரிய தீபகற்பத்தில் ஓராண்டாக அமைதி நிலவுவது குறித்தும், அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் போர் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தியது குறித்தும் குறிப்பிட்டுள்ளது. சீனாவுக்கும் வடகொரியாவுக்குமிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளின் தாக்கம், அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக சர்ச்சைகள் மீது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அப்பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. வட கொரியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை அகற்ற சீனா உதவ ஆர்வமாக உள்ளது என்றும், அதே போல், தனது அமைதி முயற்சிகள் இப்பிராந்தியத்திலும் அதனைத் தாண்டியும் பயனளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் எதிர்பார்ப்பார் என்றும் அப்பத்திரிக்கை கூறுகிறது.

 

Pin It