நாளேடுகள் நவில்வன.

”மகத்தான வெற்றி” என்ற தலைப்பில், தினமலர் நாளிதழ் 10 சதவீத இடஒதுக்கீடு தரும் புதிய சட்டம் அமலாகி உள்ளது பற்றித் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில்,

”நாட்டில் இதுவரை இடஒதுக்கீடு இருந்த முறையில் இருந்து புதிய திருப்பமாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு தரும் புதிய சட்டம் அமலாகி உள்ளது.
அரசமைப்பு சட்ட விதிகளின், 124 ஆவது திருத்தமாக அமையும் இந்த இடஒதுக்கீடு, வருமான அளவு, நில உரிமை, சொந்த வீட்டின் அளவீடு என, பல கோணங்களில், ஒருவரது வசதி வாய்ப்புகளை எடை போட உதவும்.

அரசமைப்பு சட்டவிதி, 15 மற்றும் 16ல் உள்ள சாராம்சங்களில், சிறிய மாற்றம் கொண்டு வந்து, அதனால் ஒட்டுமொத்தமாக, மேற்பட்ட குடியினருக்கு அரசு வேலை மற்றும் கல்வி வசதிகள் ஆகியவற்றில், ஒதுக்கீடு கிடைக்க உதவும்.இதுவரை, ‘ஷெட்யூல்டு’ வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர் என, மொத்த இட ஒதுக்கீட்டில், 49.5 சதவீதம் வழங்கப்பட்டது. ஷெட்யூல்டு வகுப்பினருக்கு, 15 சதவீதம், சீர்மரபினருக்கு, 7.5 சதவீதம், மிகவும் பிற்பட்டோருக்கு , 27 சதவீதம் என, 49.5 சதவீதம் என்பது நடைமுறையில் உள்ளது.
தமிழகம் போன்ற சில மாநிலங்களில், இது கூடுதலாக இருக்கிறது. ஆனால், சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே, 50 சதவீதத்திற்கு மேல் ஒதுக்கீடு கூடாது என்றாலும், அரசமைப்பு சட்டவிதிகள் திருத்தத்தில், புதிய திட்டம் அமலாவது வரலாற்று நிகழ்வு.”

என்று குறிப்பிட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறைக்கப்பட்டதை வரவேற்று, தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில்,

”ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்மீது 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி போடப்பட்ட சரக்கு சேவைவரி பேரிடியாக விழுந்தது. இந்த சுனாமியால் எதிர்நீச்சல் போடமுடியாத பல நிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும் 50 ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதாக அரசு தரப்பிலேயே கூறப்படுகிறது.

இந்தநிலையில், மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்களை கொண்ட சரக்கு சேவைவரியின் 32-வது கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சற்று இதமளிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரிவிலக்கு வரம்புக்கு ஆண்டு விற்றுமுதல் ரூ.20 லட்சமாக இருந்ததை, இப்போது ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்தகைய நிறுவனங்களை வைத்து தொழில் செய்பவர்களுக்கு ஆண்டு விற்றுமுதல் ரூ.40 லட்சம்வரை இருந்தால் அவர்கள் ஜி.எஸ்.டி. கட்டவேண்டிய தேவையில்லை. ஆனால், இதுகுறித்த முடிவை மாநில அரசுகள் ஒருவார காலத்துக்குள் முடிவுசெய்து அறிவிக்கவேண்டும். மேலும் இணக்க முறையில் வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஒரு சதவீதம் வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.1½ கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறு சேவைகள் வழங்குபவர்களின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்குள் இருக்கும்பட்சத்தில் இணக்க வரியின்கீழ் 6 சதவீதம் வரி செலுத்திடமுடியும். இதன்மூலம் தற்போது காலாண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்வதற்கு பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்தால்போதும். அவர்கள் காலாண்டுக்கு ஒருமுறை வரி செலுத்தவேண்டும். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டநிலையில், மத்திய நிதி மந்திரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஜி.எஸ்.டி. குறித்து மிக பெருமிதமாக சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். நுகர்வோர்களுக்கு பலனளிக்கும் நடவடிக்கை இது என்றும், இதனால் ஏராளமான பொருட்களுக்கு வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், விலைவாசி குறைந்துள்ளது என்றும், பல வரிவிகிதங்கள் சீரமைக்கப்பட்டபிறகு இதுவரையில் 350 பொருட்களுக்கும், 66 சேவைகளுக்கும் வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 97.5 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்பின் கீழ்தான் இருக்கிறது. 28 பொருட்கள் மட்டுமே 28 சதவீத வரிவிதிப்பில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

கடந்த 32 கூட்டங்களில் இந்த வரிகுறைப்பு நடந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பு இன்னமும் வரிசலுகைகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். அடிக்கடி நடந்த வரி குறைப்புகளால் வரிவசூல் செய்பவர்களுக்கு நிர்வாகத்தில் சற்று சிரமம் ஏற்பட்டாலும், வியாபாரிகள், சிறுதொழில் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வரிவிதிப்பு குறைவினால் பயன்பெறும் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பலன் கிடைக்கும். இது நிச்சயமாக வரவேற்கவேண்டிய ஒன்றாகும். மேலும் சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்று, இதுவரையில் இவ்வளவு பொருட்கள், சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. சரக்கு சேவைவரி குறைத்திருப்பது பாராட்டுக்குரியது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் வரி குறைக்கப்பட்டதே தவிர, வரி உயர்த்தப்படவில்லை என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகும்.”

என்று குறிப்பிட்டுள்ளது.

Pin It