நேபாளக் குடியரசுத் தலைவரின் இந்திய விஜயம் – இரு தரப்பு உறவுகளில் வலுவேற்ற

ம்.

(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்)

 

நேபாளக் குடியரசுத் தலைவர் பித்யாதேவி பண்டாரி, தனது முதல் அரசுமுறைப் பயணமாக, இந்தியா வந்துள்ளார். இந்தியாவின் உதவியுடன் நேபாளத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைவு படுத்துதல் உள்பட, பல்வேறு இருதரப்பு உறவுகள் குறித்து, இந்தியத் தலைவர்களுடன் அவர் விரிவாகப் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரைச் சந்தித்து உரையாடியபோது, அவர், உள்ளூர், பிராந்திய மற்றும் மத்திய நிலைகளில், கருத்து வேறுபாடுகள் கொண்ட அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து, புதிய அரசியல் சாசனத்தை அமல் செய்யும் விதமாக, அங்கு தேர்தல் நடத்தத் தமது அரசு எடுத்து வரும் முன்முயற்சிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

 

இந்திய எல்லையில் தெரைப் பகுதியில் வசிக்கும் மக்கள், மாதேசிகள், தாரு இனத்தவர்கள், ஜன்ஜாதிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர், வரும் மே மாதம் 14 ஆம் தேதி நடக்க இருக்கும் உள்ளூர் தேர்தலை எதிர்க்கின்றனர். பிராந்திய எல்லைப்பகுதிகளைத் திருத்தியமைக்க, நேபாள மக்களவை, அரசியல் சாசனத்தைத் திருத்தியமைத்து,  நிர்வாகத்தில் அவர்களின் பங்களிப்பை அதிகரித்த பின்னரே அங்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்துத் தரப்பினரின் விருப்பங்களுக்கும் செவிசாய்த்து, உள்ளூர் தேர்தல்களை நடத்த நேபாள அரசு எடுத்து வரும் முயற்சிகளை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டி, இந்தியா எப்போதும் நேபாளத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் வளர்ச்சியும் நிலவுவதை விரும்புவதாகத் தெரிவித்தார்.

 

 

 

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர், நேபாளக் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர். அதிபரைக் கௌரவிக்கும் விதமாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விருந்தளித்தார். அப்போது பேசுகையில், நேபாள குடியரசுத் தலைவர் பித்யாதேவி பண்டாரி, அரசியல் சாசனத்தின்படி, எல்லா நிலைகளிலும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தேர்தல்களை நடத்தி நேபாளத்தைப் பொருளதார வளர்ச்சிப் பாதையில் விரைந்து செலுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

இந்தியத் தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் நடத்திய பேச்சு வார்த்தைகளின் தொனி, இருதரப்பு உறவுகளில் நல்லெண்ணத்தை மேம்படுத்தி, மக்களின் நலனைக் காப்பதில் அவர் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் நேபாள விஜயத்தை நினைவு கூர்ந்த குடியரசுத் தலைவர், நெடுங்காலமாக நிலவி வரும் இருதரப்பு உறவுகளுக்கு அவை மெருகூட்டியதாகத் தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையே நிலவி வரும் பலதரப்பு, பன்முக உறவு, நட்பு, கூட்டுறவு, சமத்துவம், பரஸ்பர எல்லை அங்கீகரிப்பு, மதிப்பு, நன்மைகள் பங்கீடு மற்றும் புரிதல்களை அடித்தளமாகக் கொண்டுள்ளது என நேபாளக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். இந்தியாவின் தரப்பிலிருந்து, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின்படி, நேபாளத்துடன் அனைத்துத் துறைகளிலும் வலுவான உறவை மேம்படுத்தும் இந்தியாவின் முனைப்பு வலியுறுத்தப்பட்டது. நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக, பொருளாதார மறுமலர்ச்சி நடவடிக்கைகளுக்கு இந்தியா அளிக்கும் ஆதரவு வெளிப்படுத்தப்பட்டது.

 

முன்பைப்போல, இந்திய, நேபாள உறவுகளின் உச்சத்தை எட்ட, இந்திய அரசு முன்முயற்சிகள் எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி 2014 ஆம் ஆண்டு காத்மண்டு சென்ற போது, அவர் அறிவித்த தாராளமான நிதியுதவி, அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்திய, நேபாள கூட்டுக்குழுவின் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டு, பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த பரிசீலனைகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, நேபாளப் பிரதமர் புஷ்ப கமல் தஹல் இந்தியா வந்தபோது, இந்தியாவுக்கும் நேபாளத்துக்குமிடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. தெரை பகுதியில் சாலைப் போக்குவரத்து வலையத்தை விரிவுபடுத்துதல், மின் விநியோக வழித்தடங்கள் கட்டமைப்பு மற்றும் இரு நாடுகளுக்குமிடையே இரயில் போக்குவரத்து ஆகியவை அந்த ஒப்பந்தங்களில் அடங்கும். ஏப்ரல், 2017 முதல், மார்ச் 2022 வரை, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணய், விமான எரிவாயு மற்றும் சமையல் எரிவாயு போன்ற பொருட்களை நேபாளத்துக்கு வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம், நேபாளத்தின் கட்டமைப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள, இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, காத்மண்டு சென்றார். நேபாளத்தில், 15 சாலைத் திட்டங்களுக்கு, 34 கோடி டாலர் அளவில் இலகுவான கடனுதவியளிக்க இந்தியா ஒப்புக் கொண்டது. 2014 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நேபாள விஜயத்தின்போது, உலக வங்கியால் 1994 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட 900 மெகாவாட் அருண் III நீர்மின் திட்டம் மீட்டெடுக்கப்பட்டு, அதற்கு இந்தியாவின் ரூ.9,158 கோடி முதலீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பித்யாதேவி பண்டாரியின் இந்தியப் பயணம், மிகவும் பயனுள்ளதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்ததாக, நேபாள வெளியுறவு அமைச்சர் டாக்டர் பிரகாஷ் ஷரன் மஹத் கூறினார். இருநாடுகளுக்குமிடையே உயர்மட்டப் பரிமாற்றங்களை மேம்படுத்தும் பாரம்பரியத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த அரசுமுறைப் பயணம், இருநாடுகளுக்குமிடையே நட்பையும், நல்லுறவையும் மேலும் வலுப்படுத்தும். புது தில்லியில் தனது அரசுமுறை அலுவல்களைப் பூர்த்தி செய்த குடியரசுத் தலைவர் பண்டாரி, பின்னர் குஜராத் மற்றும் ஒடிஷா மாநிலங்களில் சில இடங்களுக்குச் சென்றார்.

 

Pin It