பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சட்டவிரோதமாகச் செயல்படுவதை அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் – பிரதமர்.

நாடாளுமன்றத்தின்  மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத் தொடர் சம்பந்தமாக நேற்று அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் பேசினார்.

ஊழலை அகற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டவிரோதமாக செயல்படுவோருக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒருமித்து போராட வேண்டும் என்றும்  அவர் கேட்டுக்கொண்டார்.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் கீழ் வருவதால் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது மாநிலங்கள் கடும் நடவடிக்கை எடுக்குமாறு தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய  நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு அனந்து குமார் ஜி எஸ் டி அமலாக்த்தில் ஒத்துழைப்பு தந்த எதிர்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார்.

கூட்டத்தில் பங்கேற்ற எதிர்கட்சியினர்,  நாடாளுமன்ற கூட்டம் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு தர உறுதி அளித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் பங்கேற்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

 

அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடர்  19 அமர்வுகளைக் கொண்டதாக இருக்கும் என்று நாடாளுமன்றத்துறை அமைச்சர் திரு அனந்த் குமார் கூறியுள்ளார்.

இதில் 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.                இந்த கூட்டத்தொடரில் காஷ்மீர் மற்றும் சீனாவுடனான எல்லைப்பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளன.

அமர்நாத் யாத்திரிகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு உட்பட பல்வேறு பிரச்னைகளையும் இந்த கூட்டத்தொடரில் எழுப்பப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது

எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த ஒரு பிரச்னை குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளதாக பிஜேபி கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர்    சுமுகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Pin It