பயங்கரவாதமும் பேச்சுவார்த்தைகளும் ஒன்றாக செல்ல முடியாது.

(அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)

சமீப காலமாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடன் நின்றுவிட்ட பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடர வேண்டும் என அழைப்பு விடுத்து வருகிறார். பேச்சுவார்த்தைகள் மூலமே இரு நாடுகளுக்குமிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். அண்மையில், கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தின் அடிக்கல் நாட்டு விழாவின் போது இது குறித்து மீண்டும் அவர் கூறினார். பலமுறை இவ்வாறு அவர் தெரிவித்து வருகிறார். இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்தும் விஷயத்தில், தமது அரசு, தமது கட்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவம் ஒரே கருத்தைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமது மண்ணிலிருந்து பயங்கரவாதிகள் தங்கள் நாச வேலைகளைச் செய்ய அனுமதிப்பது பாகிஸ்தான் நலனுக்கு ஒத்து வராது என்றும், அது அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

அறிவார்ந்த  எவரும், இருநாட்டு மக்களின் நலனுக்கு, அந்நாடுகளிடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்பதை மறுக்க மாட்டார்கள். இதை வைத்துப் பார்த்தால், இம்ரான்கான் அவர்களின் பேச்சில் குறை காண முடியாது. ஆனால் உண்மை நிலை மாறுபட்டு விளங்குகிறது. பாகிஸ்தான் பிரதமராகத் தான் பதவியேற்றதும், முதல் வேலையாக, அவர், பயங்கரவாதக் குழுக்கள் பட்டியலிலிருந்து, ஹஃபீஸ் ஸயீத் தலைமையில் இயங்கும் குழுக்களை விலக்கினார். தடை செய்யப்பட்ட லஷ்கர் ஏ தொய்பாவுக்கு மாற்றாக, ஹஃபீஸ் ஸயீத் தலைமையில் உருவாகிய ஃபலா ஏ இன்சானியத் மற்றும் ஜமாத் உத் தாவா ஆகியவை இதில் அடங்கும். ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட, மும்பைத் தாக்குதலின் சூத்திரதாரியான ஹஃபீஸ் ஸயீத், பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வருகிறார். அவரது தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேர்தல்களில் ஹஃபீஸ் ஸயீத்தின் கட்சியான மில்லி முஸ்லீம் லீக் அனுமதிக்கப்பட்டதன் மூலம், ஹஃபீஸ் ஸயீத் ஐ அங்கீகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்ரான்கான் பிரதமராகப் பதவியேற்ற 100 நாட்களுக்குள்,    சந்தேகத்துக்கிடமான சில மதராஸாக்கள் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மதராஸாக்களை பயங்கரவாதத்துடன் இணைக்கக் கூடாது என்று இம்ரான்கான் கூறுகிறார். எனினும், சில மதராஸாக்களின் செயல்பாடுகள் குறித்து உலக நாடுகள் சந்தேகிப்பதையும், அவை தவறான வழிகளில் நிதியுதவி பெற்று வருவதையும் அவர் அறிவார். இம்மாதிரியான மதபோதகப் பள்ளிகள் மூலம், பாகிஸ்தானில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மூளை மழுங்கடிக்கப்பட்டு பயங்கரவாதத்தை நோக்கி செலுத்தப்பட்டு வருகிறார்கள்.

கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தின் அடிக்கல் நாட்டு விழா, முற்றிலும் மதம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியை காஷ்மீர் விவகாரத்தைக் கையிலெடுக்கும் அரசியல் வாய்ப்பாக மாற்ற இம்ரான்கான் முயற்சித்துள்ளார். இந்நிகழ்ச்சியை சற்று லகுவாக மாற்றும் முயற்சியாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகம்மது குரேஷி, கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தைத் துவக்கியதன் மூலம், இம்ரான்கான் இந்தியாவுக்கு ஒரு கூக்லி பந்து வீசியுள்ளார் என்று குறிப்பிட்டார். இதனை உடனடியாக, இந்தியா மறுத்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் சற்றும் குறையாமல் தொடர்கின்றன. அண்மையில், அமிர்தசரஸில், ஒரு சமயக் கூட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமுற்றனர். மதக்கலவரத்தை ஏற்படுத்தி, பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கச் செய்யும் முயற்சியாக இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது. இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டுகள், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை எனத் தெரிய வந்துள்ளது. இதன்மூலம், இத்தாக்குதல் எங்கிருந்து புறப்பட்டது என்பது தெள்ளத் தெளிவாகிறது. கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில், காலிஸ்தான் தீவிரவாதக் குழுவின் தலைவர் கோபால் சிங் சாவ்லா, இம்ரான்கான் மற்றும் ராணுவத் தளபதி ஜெனெரல் பாஜ்வா ஆகியோரால் வரவேற்கப்பட்டது வெட்ட வெளிச்சமாகியது.

எனவே, இம்ரான் கானின் சொல்லுக்கும் செயலுக்குமிடையே, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது. இதன் பின்னணியில், பேச்சுவார்த்தைக்கான தூண்டிலில் இந்தியா சிக்கும் என அவர் கனவு காண்பது நிறைவேறாத ஒன்று. இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்தாத வரை, இருநாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை துவங்காது என்று சற்றும் தாமதிக்காமல், தெளிவுபடக் கூறினார். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தைகளும் ஒன்றாக செல்ல முடியாது என்று அவர் கூறினார்.

பயங்கரவாதம் குறித்த தனது நிலையில் இந்தியா மிகவும் உறுதியாக உள்ளதைப் பாகிஸ்தான் உணர வேண்டும். பயங்கரவாத்தை எதிர்த்து, உறுதியான, வெளிப்படையான, தெளிவான நடவடிக்கையைப் பாகிஸ்தான் எடுத்தாலொழிய, பாகிஸ்தானின் கூச்சல்கள் செவிமடுக்கப்படாது. தாம் உண்மையிலேயே பயங்கரவாதத்தை எதிர்த்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக, பாகிஸ்தான் இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகுக்கே, நிரூபிக்க வேண்டும். இவ்வாறு நடந்தால், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க இந்தியா முன்வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

Pin It