பருவ மழைக் காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வட கிழக்கு பருவமழைக் காலத்தில் சென்னை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் 12 மாநகராட்சிகள் 124 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் டெங்கு மற்றும் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு எஸ். பி. வேலுமணி கூறியிருக்கிறார். சென்னையில் நேற்று இது தொடர்பாகத் தமது துறையின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் சென்று துப்புரவுப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றார். 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழையினால் நீர் தேங்கிய இடங்களைக் கண்டறிந்து இம்முறை மழை நீர் தேங்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மழை நீர் வடிகால்கள் பெரிய கால்வாய் மற்றும் நதியின் முகத் துவாரங்களைத் தண்ணீர் எளிதாகச் சென்றடையும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் உத்தரவிட்டார்.

Pin It