பாகிஸ்தானில் தொடரும் அரசியல் சூழ்ச்சிகள்

.பாகிஸ்தான் விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் ஸைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி.குருமூர்த்தி

பாகிஸ்தானில், அரசுக்கு எதிராக, பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்ற பெயரில் ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள், லாகூரில், மினார் ஏ பாகிஸ்தானில், நடத்திய 2020, முதல்கட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. இம்ரான்கான் அரசை வீழ்த்தும் இறுதி அஸ்திரம் என்று, லாகூர் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் வர்ணித்தன. எனினும், எதிர்க்கட்சிகள் விரும்பியபடி, இப்போராட்டம் வெற்றியடையவில்லை. பிஎம்எல் – என் கட்சியின் பலமான கோட்டையாகக் கருதப்படும் பஞ்சாப் மாகாணத்தில் அதன் குரல் எடுபடவில்லை. இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி நடத்த உத்தேசிக்கும் இரண்டாம் கட்டப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பிடிஎம் உற்சாகம் இன்றி காணப்படுகிறது. இதிலுள்ள பல கட்சிகள், தேசிய மற்றும் மாகாண சபைகளிலிருந்து ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யும் யோசனையை எதிர்க்கின்றன.

ஜமாத் – ஏ –  உலேமா – ஏ – இஸ்லாமி (எஃப்) கட்சிக்குள் விரிசல்கள் தோன்றியுள்ளன. மௌலானா ஃபஸல் – உர் – ரெஹ்மானுக்கு எதிரான குரல்கள் ஓங்கத் துவங்கியுள்ளன. அதேசமயம், இவ்வியக்கத்துக்கு எதிரான செயலுத்தியை அரசு கூர்மையாக்கியுள்ளது. என்ஆர்ஓ தவிர்த்து, அனைத்து பிரச்சனைகளையும் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் இம்ரான்கான் சுட்டிக்காட்டியுள்ளார். எந்த ஒரு பதவியிலும் இல்லாததால், ஃபஸல் – உர் – ரெஹ்மான் மற்றும் மரியம் நவாஸ் இதில் சேர்க்கப்படவில்லை.  பிஎம்எல் – என் கட்சியின் இஸ்லாமாபாத் கூட்டத்துக்குப் பின்னர், அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான கவாஜா முகமது ஆசிஃப் மீது, வரம்புமீறி சொத்து சேர்த்த வழக்கில் தேசிய பொறுப்பேற்பு மன்றத்தினால் குற்ற்ம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டது, பிடிஎம் க்கு ஏற்பட்ட இறுதி அடியாக அமைந்தது.

 

அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில், இம்ரான்கான் ராஜினாமா செய்யாத பட்சத்தில், தங்கள் பேரணி, ராவல்பிண்டியிலுள்ள ராணுவத் தலைமையிடத்தை நோக்கி நகரும் என்று, பிடிஎம் அறிவித்துள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வரை, இம்ரான்கான் அரசு ராஜினாமா செய்ய காலக்கெடு விதித்த பிடிஎம், அதன் பின்னர், தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, ராணுவத் தலைமையிடத்தை நோக்கி பேரணி, தேர்தல் கமிஷனுக்கும், தேசிய பொறுப்பேற்பு மன்றத்துக்கும் முன்னால் மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளது. பிடிஎம் க்குத் தலைவரான மௌலானா ஃபஸல் – உர் – ரெஹ்மான், இப்போது அதன் கண்டனம், தகாத வழியில் இம்ரான்கான் அரசை நிறுவிய ராணுவத் தலைமையிடத்தை நோக்கித் திரும்பும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தையும், தளபதிகளையும் பிடிஎம் மதிக்கிறது. ஆனால், ராணுவம் இப்போது தனது அரசியலமைப்புப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பிடிஎம் எதிர்பார்க்கிறது.

எனினும், பிஎம்எல் – என் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும் வகையில், 2021 பிப்ரவரியில் காலாவதியாகும் நவாஸ் ஷெரீஃப்ஃபின் கடவுச் சீட்டை ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. நாடில்லாத நபராக ஷெரீஃப் ஐ ஆக்கி, அவரை பிரிட்டனில் தஞ்சம் புகவோ, சவூதி அரேபியா அல்லது கத்தார் போன்ற நாடுகளுக்குச் செல்லவோ அல்லது பாகிஸ்தான் திரும்பி, நீதிமன்றத்தை எதிர்கொள்ளவோ நிர்ப்பந்திக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஆனால், அவரது கடவுச்சீட்டை ரத்து செய்வதால் நவாஸ் ஷெரீஃப் பிறநாடுகளுக்குச் செல்வது தடைபடுமேயன்றி, வேறு பாதிப்பு இருக்காது என்று சில ஆய்வாளர்கள் விவாதிக்கின்றனர்.

அண்மையில் நடந்த லாகூர் கூட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் யோசனையை ஏற்று, இடைத் தேர்தலில் பங்கு கொள்ள முடிவெடுத்ததன் மூலம், ஜனநாயகப் பாதையில் செல்ல பிடிஎம் தீர்மானித்துள்ளது போல் தோன்றுகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக, 8 தேசிய, மாகாண சபைகளுக்கான இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டம் நீளும் என்றும், இவ்வாண்டு முடிவுக்குள் இம்ரான்கான் அரசு முடிவுக்கு வருவது சந்தேகம் என்றும் சில எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும், எகிறும் விலைவாசியும், மோசமான பொருளாதார நிலையும் மக்களிடையே அதிருப்தியை அதிகரித்துள்ளன என்பது கண்கூடு. எனவே, எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாவிட்டாலும் மக்கள் போராட்டத்தில் குதிக்கக் கூடும்.

இந்த அரசியல் நீயா நானா போட்டிக்கு இடையே, அபூர்வமான நிகழ்வாக, 26/11 மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாக ஜாமீனில் இருக்கும் சகி – உர் – ரெஹ்மானை இம்ரான்கான் அரசு கைது செய்துள்ளது. இது, பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச நிதி செயல்பாட்டுக் குழுவைத் திருப்திப் படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். அக்குழுவின் அடுத்த முழுக் கூட்டம் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. அதில், பாகிஸ்தான் தொடர்ந்து சாம்பல் பட்டியலில் வைக்கப்படுமா அல்லது தரம் தாழ்த்தி, கறுப்புப் பட்டியலில் இடப்படுமா என்பது தீர்மானமாகும்.

*************************

 

 

 

Pin It