பாஜக தனியாகவே பெரும்பான்மை பெற்றாலும்கூட, கூட்டணி ஆட்சியையே அமைக்கும்  – பிரதமர் திரு நரேந்திர மோதி.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகளுக்குக் கதவு திறந்தே இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோதி கூறியுள்ளார். தமிழகத்தில் அரக்கோணம், தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மக்களவைத் தொகுதி பாஜக தொண்டர்கள் இடையே காணொலிக் காட்சி வழியாக நேற்று உரையாற்றிய அவர், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமான கூட்டணி ஆட்சியை நடத்தினார் என்றார். இதன் மூலம் பிராந்தியக் கட்சிகளின் குரல்கள் தேசிய  அளவில் எதிரொலித்தன என்றும், அதே பாதையை பாஜக தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றும் திரு மோதி குறிப்பிட்டார்.

பாஜக தனியாகவே பெரும்பான்மை பெற்றாலும்கூட, கூட்டணி ஆட்சியையே அமைக்கும் என்று அவர் கூறினார். மத்திய – மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் இன்றைய பாதுகாப்பு நிலை பற்றிக் குறிப்பிட்ட திரு மோதி,  முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ஆயுதக் கொள்முதலில் இடைத்தரகர்களின் தலையீடு அதிகமாக இருந்தது என்றும், அண்டை நாடுகள் சில தங்களது விமானப் படைகளின் பலத்தை அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவில் ஆயுதக் கொள்முதல் மிகக் குறைவாக இருந்தது என்றும் குற்றம்  சாட்டினார். நாட்டின் பாதுகாப்பில் பாஜக அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்று திரு நரேந்திர  மோதி தெரிவித்தார்.

Pin It